அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டி பிரிவில் இன்று அதிகாலை பயங்கர விபத்து ஏற்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.
தஞ்சாவூரிலிருந்து தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவ நிறுவனத்திற்காக மருத்துவ பயன்பாட்டு எரிவாயுவை ஏற்றிய கேஸ் டேங்கர் லாரி, நாமக்கல்லைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் (60) என்பவரால் இயக்கப்பட்டு வந்தது. அவர், அருப்புக்கோட்டை அருகே சாலையோரத்தில் லாரியை நிறுத்திவிட்டு உறங்கிக் கொண்டிருந்தார்.
அதே நேரத்தில், கொல்கத்தாவில் இருந்து அலங்கார பனை ஓலைகளை ஏற்றிச் சென்ற லாரி, திண்டுக்கல்லைச் சேர்ந்த செல்வம் (45) என்பவரால் ஓட்டப்பட்டு வந்தது. இன்று அதிகாலை 4 மணியளவில், இந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் நின்றிருந்த கேஸ் டேங்கர் லாரியை மோதியது.
இந்த விபத்தில், கேஸ் டேங்கர் லாரியின் வால்வு உடைந்ததால், மருத்துவ பயன்பாட்டிற்கான எரிவாயு வெளியேறத் தொடங்கியது. தகவலறிந்த அருப்புக்கோட்டை தீயணைப்புத்துறை, மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் சந்திரகுமார், உதவி அலுவலர் தாமோதரன், நிலைய அலுவலர் ராமராஜ், சிறப்பு நிலைய அலுவலர் ஷேக் உதுமானா ஆகியோர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காஸ் கசியலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.
தீயணைப்புத்துறை வீரர்கள் தொடர்ந்து நீரை பீய்ச்சியடித்து, கேஸ் பரவுவதை கட்டுப்படுத்தினர். இருப்பினும், கேஸ் தொடர்ந்து வெளியேறியதால், வாகன ஓட்டிகள் அச்சத்தில் இருந்தனர். இதனால், அருகில் சென்ற வாகனங்கள் சற்று தொலைவில் நிற்கும்படி போலீசார் வழிகாட்டினர்.
அதிகாரிகள் கூறியதாவது: "வெளியேறிய கேஸ் மருத்துவ பயன்பாட்டிற்காக இருந்ததால், சுற்றுச்சூழலுக்கு அல்லது மக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை. இருப்பினும், சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான கேஸ் வெளியேறியுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. விபத்து தொடர்பாக அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்" என்று தெரிவித்தனர். இந்த விபத்து அருப்புக்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.