தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் பாதுகாக்கும் வகையில் டெல்லி தமிழ் அகாடமி அமைக்கப்படும் என டெல்லி அரசு அறிவித்தது.
தமிழ் அகாடமி டெல்லி அரசின் கலை, கலாச்சாரம் மற்றும் மொழித் துறையின் கீழ் செயல்படும். இந்தத் துறை தற்போது உருது, சமஸ்கிருதம், பஞ்சாபி, இந்தி, சிந்தி, மைதிலி, போஜ்புரி ஆகிய மொழிகளுக்கான கல்விக்கூடங்களை நடத்தி வருகிறது.
"டெல்லி கலாச்சார ரீதியாக பன்முகத் தன்மைகளை கொண்டு விளங்குகிறது. நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் டெல்லியில் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பன்முகத்தன்மைதான் டெல்லியின் துடிப்பான கலாச்சாரத்தை உருவாக்குகிறது. டெல்லியில் தமிழகத்தைச் சேர்ந்த மக்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர், ”என்று துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தனது ட்விட்டரில் தெரிவித்தார்.
டெல்லி அரசுக்கு நன்றி தெரிவித்தார் தமிழக முதல்வர், " தமிழ் மொழியின் சிறப்பையும், தமிழ் கலாச்சாரத்தின் பெருமைகளையும் பரப்பும் வகையில் "டெல்லியில் தமிழ் அகாடமி" அமைத்துள்ள மாண்புமிகு டெல்லி முதல்வர் மற்றும் மாண்புமிகு துணை முதல்வர் ஆகியோருக்கு தமிழக அரசின் சார்பாக எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தமிழில் ட்விட்டர் பதிவை வெளியிட்டார், அதில், " பன்முகத்தன்மையில் ஒற்றுமை என்பது நம் நாட்டின் பெருமை, அதை பாதுகாப்பது நமது கடமை. வாழ்க தமிழ்!" என்று தெரிவித்தார்.
முன்னதாக, திமுக தலைவர் மு. க ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், " டெல்லியில் தமிழ் அகாடமி அமைப்பது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். கலாச்சார இணைப்புகளை வளர்க்கவும், தமிழ் பாரம்பரியத்தை வெளிப்படுத்தவும் உதவும். திமுக சார்பாக, எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த முயற்சிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மனிஷ் சிசோடியா இருவருக்கும் வாழ்த்துக்கள்" என்று தெரிவித்தார்.