Arun Janardhanan
Tamil Nadu considers lockdown extension : கடந்த வாரத்தில் 16 மாவட்டங்களில் கொரோனா தொற்று பாதிக்கும் விகிதம் 20%க்கும் மேலே இருக்கின்ற காரணத்தால் மேலும் ஒருவாரத்திற்கு தமிழகத்தில் ஊரடங்கு அமல்ப்படுத்துவது குறித்து தமிழக அரசு ஆலோசனை செய்து வருகிறது. மாவட்ட அளவில் தொற்றுகளை தடுப்பது குறித்து திட்டங்கள் தீட்டப்பட்டு வருகிறது.
செங்கல்பட்டு மற்றும் தேனி மாவட்டங்களில் 30%க்கும் அதிகமாக கொரோனா பாதிப்பு விகிதம் உள்ளது. செவ்வாய்க்கிழமை அன்று நாட்டில் அதிக தொற்றுக்களை சந்தித்த மாநிலமாக தமிழகம் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த வாரம் தொற்றுகளின் எண்ணிக்கையில் சற்று குறைவு ஏற்பட்டுள்ளது. களத்தில் நின்று கொரோனா தொடர்பான பிரச்சனைகளை கையாண்டு வரும் அமைச்சர்களில் ஒருவர் தமிழகத்தில் இப்போது இரண்டு திட்டங்கள் உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டும் என்றார். ஒன்று கோவையில் ஏற்பட்டுள்ள மோசமான சூழலை கட்டுக்குள் கொண்டு வருவது மற்றொன்று மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கினை அமல்படுத்துவது.
மே மாதம் முதல் இரண்டு வாரங்களில் சீராக நேர்மறை விகிதம் அதிகரித்து வந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் மே 12 முதல் 18 தேதிகளில் நேர்மறை விகிதம் 31.5% ஆக பதிவாகியுள்ளது. தேனி (30.3%), கோவை (29.3%), கன்னியாகுமரி (27.1%), தூத்துக்குடி (26.7%) போன்ற மாவட்டங்களிலும் தொற்று அதிகமாக காணப்படுகிறது.
கோவை இல்லாமல் சென்னை (22.4%), மதுரை (15.2%), திருச்சி (22.5%) மற்றும் திருப்பூர் (21.2%) போன்ற நகரப்புறங்களிலும் பாதிப்புகள் அதிகரித்துள்ளது. இவை தமிழகத்தில் அரசின் செயல்பாடுகளை கவலைக்கு ஆளாக்கியுள்ளது. மாநிலம் முழுவதும் மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பியுள்ள நிலையில் ஆக்ஸிஜன் படுக்கை வசதிகளும் குறைவாகவே உள்ளது.
சென்னையில் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை தேக்கம் அடைந்திருப்பதாக தெரியலாம். ஆனால் அதனை நினைத்து மகிழ்ச்சி அடைய முடியாது. சென்னை போன்ற நகரங்களில் 95 முதல் 98% வரையிலான ஆக்ஸிஜன் மற்றும் ஐ.சி.யு படுக்கைகள் நிரம்பியுள்ளன. ஊரடங்கு முழுமையாக, கடுமையான கட்டுப்பாடுகளுடன் பின்பற்றப்பட்டப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 1.5 லட்சம் என்ற அளவில் சோதனைகளை நடத்தி வருகிறோம். சென்னையில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. ஆனால் கோவை மற்றும் இதர நகரங்களின் நிலைமை கவலை அளிக்கிறது. மிகச்சிறிய மாவட்டமான அரியலூரும் கூட தற்போது கவலை அளிக்கிறது. எனவே நாங்கள் மாவட்ட அளவில் நோயை கட்டுப்படுத்துவதற்கான திட்டங்களில் இறங்கியுள்ளோம் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறினார்.
மாவட்டங்களில் படுக்கை வசதிகளை அதிகரிக்க அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை சிகிச்சை மையங்களிலும் ஆக்ஸிஜன் வசதிகளை கொண்டு வருகிறோம் என்றும் அவர் கூறினார். மாவட்டங்களில் சோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க, முதல்வர் காப்பீட்டு திட்டங்களில் இல்லாதவர்களுக்கு சோதனைக்கான கட்டணத்தை தமிழக அரசு ரூ. 1200ல் இருந்து ரூ. 900மாக குறைத்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil