திமுகவின் சிறுபாண்மை அணி சார்பில் ஜனவரி 6ம் தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில் இதயங்களை இணைப்போம் மாநாட்டில் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி தலைவரும் எம்.பி-யுமான அசாதுதீன் ஓவைசி பங்கேற்க உள்ளார். ஓவைசி முதல் முறையாக திமுக மாநாட்டில் பங்கேற்பதன் மூலம் தமிழக அரசியல் களத்தில் நுழைகிறார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், பத்தாண்டுகளாக ஆட்சியில் இருந்து வரும் அதிமுகவை வீழ்த்தி இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில், எதிர்க்கட்சியான திமுக தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிமுகவை நிராகரிப்போம் என்று மாவட்டந்தோறும் சென்று மக்கள் கிராம சபைக் கூட்டங்களை நடத்தி வருகிறார்.
அதுமட்டுமில்லாமல், மு.க.ஸ்டாலின் தமிழகம் மீட்போம் என்ற தலைப்பிலும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், திமுகவின் சிறுபான்மை அணி சார்பில், வருகிற ஜனவரி 6ம் தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில், ‘இதயங்களை இணைப்போம்’ என்ற தலைப்பில் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவரும், மக்களவை எம்.பி-யுமான அசாதுதீன் ஓவைசி வருகை தருமாறு திமுக சார்பில் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
திமுகவின் அழைப்பை ஏற்றுக்கொண்ட அசாதுதீன் ஓவைசி இந்த மாநாட்டில் கலந்துகொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார். இதனால், ஜனவரி 6ம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் மாநாட்டில் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி தலைவர் ஓவைசி பங்கேற்கிறார். திமுகவின் ‘இதயங்களை இணைப்போம்’ மாநாட்டில் இஸ்லாமிய இயக்கங்களின் தலைவர்கள், உலமாக்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் பங்கேற்க உள்ளனர்.
அண்மையில் பீகாரில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அசாதுதீன் ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி 5 இடங்களில் வெற்றி பெற்றது. அதோடு, பல தொகுதிகளில் ஆர்.ஜே.டி, காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் ஆகியவற்றின் வெற்றி வாய்ப்பை பாதிக்கும் அளவில் வாக்குகளைப் பெற்றார். ஹைதராபாத்தைச் சேர்ந்தவரான ஓவைசியும் அவரது கட்சியும் பீகார் தேர்தலில் பெற்ற வெற்றி இந்திய அளவில் கவனத்தைப் பெற்றது. ஓவைசியின் இந்த வளர்ச்சி இந்தியா முழுவதும் பரவ வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்தனர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜனவரி 6ம் தேதி நடைபெறும்‘இதயங்களை இணைப்போம்’ மாநாட்டில் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி தலைவர் ஓவைசி முதல்முறையாக தமிழக அரசியல் களத்தில் நுழைகிறார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"