Advertisment

396 கோடி செலவில் ஆசியாவின் மிகப்பெரிய கால்நடைப் பூங்கா! - முதல்வர் பழனிசாமி

பல்நோக்குடன் கூடிய நவீன கால்நடைப் பூங்கா ஒன்று சுமார் 396 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
asia's biggest livestock park - சேலத்தில் ஆசியாவின் மிகப்பெரிய கால்நடைப் பூங்கா! ரூ.396 கோடி செலவில்...! - முதல்வர் பழனிசாமி

asia's biggest livestock park - சேலத்தில் ஆசியாவின் மிகப்பெரிய கால்நடைப் பூங்கா! ரூ.396 கோடி செலவில்...! - முதல்வர் பழனிசாமி

சேலம் மாவட்டம் தலைவாசலில் 900 ஏக்கரில் ரூ.396 கோடியில் கால்நடை பூங்கா அமைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார் விதி 110-ன் கீழ் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Advertisment

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த பிப்ரவரி 8ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதன் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தின் இடையே முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு திட்டங்கள், நிதியுதவி உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இன்று இறுதி நாள் விவாதம் நடந்து வருகிறது.

சட்டசபையில் பேசிய முதல்வர் பழனிசாமி, "சேலம் மாவட்டம், தலைவாசல் கூட்டு ரோட்டிற்கு அருகில் தேசிய நெடுஞ்சாலை எண்–79ஐ ஒட்டி அமைந்துள்ள கால்நடை பராமரிப்பு துறைக்கு சொந்தமான 900 ஏக்கர் பரப்பில் கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வள நடைமுறைகள் மற்றும் தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய உலகத் தரம் வாய்ந்த ஆசியாவிலேயே பெரிய ஒருங்கிணைந்த பல்துறை பல்நோக்குடன் கூடிய நவீன கால்நடைப் பூங்கா ஒன்று சுமார் 396 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

மூன்று பிரிவுகளாக அமையவுள்ள இப்பூங்காவின் முதலாவது பிரிவில் நவீன வசதிகளைக் கொண்ட கால்நடை மருத்துவமனை, நவீன பண்ணை முறைகளை விவசாயிகளுக்கு எடுத்துக் காட்டும் வகையில் கறவை மாட்டுப்பண்ணை, உள்நாட்டு மாட்டினங்களான காங்கேயம், உம்பளாச்சேரி, ஆலம்பாடி, புலிக்குளம் மற்றும் பர்கூர் ஆகியவற்றில் பாதுகாப்பு மற்றும் இனப்பெருக்கப் பண்ணை, செம்மறி மற்றும் வெள்ளாட்டின பண்ணை, பன்றிகள், கோழியினப் பிரிவுகள், மற்றும் நாட்டின நாய் இனங்களான ராஜபாளையம், சிப்பிப்பாறை, கோம்பை, கன்னி ஆகியவற்றுக்கான இனப்பெருக்கப் பிரிவுகளைக் கொண்ட கால்நடை பண்ணை வளாகம் அமைக்கப்படும்.

இரண்டாம் பிரிவில், பால், இறைச்சி மீன் மற்றும் முட்டை போன்ற உணவுப்பொருட்களை பாதுகாத்து பதப்படுத்தவும், அவற்றிலிருந்து பல்வேறு உபபொருட்கள், மதிப்பு கூட்டிய பொருட்களை தயார் செய்யவும், அவற்றை சந்தைப்படுத்த வசதி ஏற்படுத்தவும், மூன்றாவது பிரிவில் பயிற்சி, விரிவாக்கம், கல்வி, ஆராய்ச்சி மற்றும் தொழில் முனைவோருக்கான பயிலரங்கத்துடன் பல்வேறு அம்சங்கள் கொண்ட வளாகம் அமைக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இந்த நவீன பூங்கா தமிழகத்தில் கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தில் படிக்கின்ற அனைத்து மாணவர்களுக்கும் பயிற்சி மேற்கொள்ளவும், உலக நாடுகளில் உள்ள கால்நடை மருத்துவம் படிக்கின்ற மாணவர்களுக்கும், அங்கே வந்து ஆராய்ச்சி மேற்கொள்ளவும், நவீன வசதிகள் ஏற்படுத்துப்பட்டுள்ளன என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன். உலகத்தரம் வாய்ந்த இவ்வளாகம், மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில்முனைவோர் மற்றும் நுகர்வோர் பயன்பெறும் வகையில், அனைத்து அடிப்படை வசதிகளும் கொண்ட வளாகமாக அமையும்.

மரபுத்திறன் மிக்க நாட்டின மற்றும் கலப்பினக் காளைகளைக் கொண்டு 100 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் புதிய உறைவிந்து உற்பத்தி நிலையம் அமைக்கப்படும் என்று துணை முதலமைச்சர் தனது 2019–2020 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் அறிவித்த உறைவிந்து உற்பத்தி நிலையம் இந்த வளாகத்திலேயே அமையப்பெறும்.

மிகப்பெரிய அளவில் இப்பூங்கா அமைக்கப்படுவதால், இதனை நிர்வகிப்பதற்கு, தொடர்புடைய துறை இயக்குனர்கள், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் நிர்வாக இயக்குனர், தமிழ்நாடு கால்நடை மருத்துவ மற்றும் அறிவியல் பல்கலைக் கழகம் மற்றும் அம்மாவின் பெயரால் அமைந்துள்ள மீன்வள பல்கலைக்கழகத்தின் பதிவாளர்கள் ஆகியோரை செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களாக கொண்டு, ஒரு சங்கம் அமைக்கப்பட்டு, பதிவு செய்யப்படும். இத்திட்டத்தை ஒருங்கிணைத்து சிறப்பாக செயல்படுத்திட கால்நடை பராமரிப்பு கூடுதல் இயக்குநர் பதவி உருவாக்கப்படும். மேலும், சம்பந்தப்பட்ட துறைகளிலிருந்து பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, தினசரி நிர்வாகப் பணிகள் மேற்கொள்ளப்படும்" என்று தெரிவித்து இருக்கிறார்.

Edappadi K Palaniswami Salem
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment