த. வளவன், மூத்த பத்திரிகையாளர்
பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையை அணுகும் போது உயர் அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். துறை ரீதியான பொறுப்புகளை உயரதிகாரிகள் தட்டிக்கழிக்க கூடாது. தகுந்த நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் உயர் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சில நாட்களுக்கு முன்பு தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் ஆடியோ ஒன்றை வெளியிட்டார். கடந்த மாதம் தென் மண்டல ஐ. ஜியாக அஸ்ரா கார்க் பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் ஓபன் மைக் மூலம் தென் மண்டல காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு அஸ்ரா கார்க் விடுத்த எச்சரிக்கை ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
தென் மாவட்டங்களில் சாதி ரீதியான மோதல்கள், அதன் விளைவாக கொலைகள் நடைபெறுவது வாடிக்கையான விஷயம். இது தொடர்பாக தகவல் தரும் சிறப்பு குழுவிடம் இருந்து தகவல் வந்ததும் நடவடிக்கை எடுக்காத காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு செக் வைக்கும் முயற்சியே இது என்கின்றனர் காவல்துறையினர். விசாரணையின் அடிப்படையில் அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்படும் என்று கூறி பதற வைத்திருக்கிறார் தென்மண்டல ஐ.ஜி.
இனிமேல் தென் மாவட்டங்களில் சாதி ரீதியான மற்றும் பழிக்கு பழியாக கொலைகள் நடக்கும் முன் தகவல் வந்தால், அதன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். நியாயமாக என்ன இருக்கிறதோ அதன்படி சார்ஜ் ஷீட் போட வேண்டும். பொறுப்பை உயரதிகாரிகள் தட்டிக்கழிக்க கூடாது. நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் உயர் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தவறுகளை தடுக்காத அதிகாரிகள் முதலில் பணியிடமாற்றம் செய்யப்படுவார்கள். அதன் பின்பு பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள். மூன்றாவதாக அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். தவறுகளை தடுக்கும் பட்சத்தில் நீங்கள் கவுரவமாக பணியை காப்பாற்றிக்கொள்ள முடியும். நிறைய பேருக்கு சைபர் கிரைம் பற்றி தெரியவில்லை. விழிப்புணர்வே இல்லாமல் இருக்கிறார்கள். 1930 என்றால் யாருக்குமே தெரியவில்லை. சைபர் கிரைம் உதவி எண்கள் கூட தெரியாமல் இருக்கின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் போன் செய்தால் நடவடிக்கை எடுக்க தெரிய வேண்டும் என்பது தான் இவர் வெளியிட்ட ஆடியோவின் சாராம்சம்.
யார் இந்த அஸ்ரா கார்க்
தமிழ்நாடு கேடரைச் சேர்ந்த 2004 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான கார்க் , வேலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூரில் உதவிக் காவல் கண்காணிப்பாளராக தனது காவல் பணியை தொடங்கினார். பஞ்சாப் மாநிலம், பாட்டியாலா நகரில் பிறந்த கார்க் மின் பொறியியல் பட்டம் பெற்றவர். கார்கின் தாய்மொழி பஞ்சாபி என்றாலும் அவர் தமிழகம் வந்த பிறகு திருக்குறள் படிக்கும் அளவுக்கு தமிழ் புலமையை வளர்த்துக் கொண்டவர்.
2008 ஆம் ஆண்டில், கார்க் திருநெல்வேலி மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். இங்கு அவர் இருந்த இரண்டு வருடங்கள் மக்களுக்கு பொற்காலமாகவும் சமூக விரோதிகளுக்கு கடைசிக் காலமாகவும் இருந்தது. அந்தக் காலகட்டத்தில், கந்துவட்டி கொடுமையை நிர்வகிப்பதில் கார்க் ஒரு முனைப்புடன் செயல்பட்டார். அபரிமிதமான வட்டி விகிதங்களை வசூலித்துக் கொண்டிருந்த கந்துவட்டிக்காரர்கள் நடவடிக்கைகளைக் கண்டுபிடித்து அவர்களை கட்டுப்படுத்த ஒரு சிறப்பு படையை உருவாக்கினார். எந்த ஒரு குற்றத்திற்கும் எதிரான புகார்களுக்காகக் காத்திருப்பதற்கு பதிலாக, கார்க் தனது குழுவை வெளியே சென்று விருப்பமுள்ள புகார்தாரர்களைக் கண்டறியச் செய்து தனக்கென ஒரு தனிப்பாணியை உருவாக்கினார்.
2006 முதல் 2011 வரையிலான கால கட்டம். மதுரை மு.க.அழகிரியின் கோட்டையாக இருந்த காலம். துணை முதல்வர் ஸ்டாலினே மதுரையில் ஏதாவது நிகழ்வு என்றால் தவிர்க்கும் அளவுக்கு அழகிரியின் கை ஓங்கியிருந்த காலம். அந்த நேரத்தில் 2011 சட்டப்பேரவைத் தேர்தல் வந்தது. தேர்தல் ஆணையத்தின் கைக்கு அதிகாரம் போனதும், மதுரையில் யாரை போட்டால் தேர்தலை அமைதியாக நடத்தலாம் என்று யோசித்தவர்கள், மதுரை மாவட்டக் கலெக்டராக சகாயம் ஐஏஎஸ், மதுரை போலீஸ் கமிஷனராக கண்ணப்பன் ஐபிஎஸ், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக அஸ்ரா கார்க் ஐ.பி.எஸ் ஆகியோரை நியமித்து உத்தரவிட்டனர். இவர்களது அதிரடிக்கு முன்னால் மு.க.அழகிரியின் தேர்தல் வியூகங்கள் எல்லாம் தோற்றுப் போயின. அதற்கு முன்பு நடந்த மதுரை மேற்கு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தலின் போது, அதிமுகவினரை ஓட ஓட விரட்டிய திமுகவினர், 2011-இல் அடக்கி வாசிக்க வேண்டியதாகிவிட்டது. தேமுதிகவினர் கூட, திமுகவின் முக்கிய நிர்வாகிகளை பணமும் கையுமாக பிடித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்தார்கள். அந்தத் தேர்தலில் மதுரை மாவட்டத்தில் 10 தொகுதிகளிலும் திமுக படுதோல்வியை சந்தித்தது.
இந்தப் பணியை மெச்சும் விதமாக முதல்வராக பொறுப்பேற்ற ஜெயலலிதா, தேர்தல் ஆணையம் நியமித்த இந்த அதிகாரிகளையே மதுரையில் தொடரச் செய்தார். அழகிரி ஆதரவாளர் பொட்டு சுரேஷை கைது செய்து தரையில் அமர வைத்த பெருமை அஸ்ரா கார்க்குக்கு உண்டு. ஆட்சி அதிகாரம் இருந்தபோது ஒரு பெண் போலீஸ் அதிகாரியை மிகக் கேவலமான வார்த்தைகளால் பொட்டு சுரேஷ் திட்டியிருந்த தகவலை அறிந்த அஸ்ரா கார்க், அதே பெண் போலீஸை வைத்து பொட்டு சுரேஷ் வழக்கை பதிவு செய்ய வைத்தார். அந்தப் பெண் அதிகாரி முன்பு தரையில் உட்கார வைக்கப்பட்டார் பொட்டு சுரேஷ்.
உத்தப்புரம் கிராமத்தில் தலித்துகள் மற்றும் தலித் அல்லாதவர்களுக்கு இடையே சமாதான பேச்சுவார்த்தைகளைத் தொடங்கி, தலித்துகள் கோயிலுக்குள் நுழைவதை உறுதி செய்ததில் அஸ்ரா கார்கின் பங்கு முக்கியமானது. தகராறில் சரியான தீர்வு காண்பதில் நீதிமன்றத்திற்கு உதவுவது மட்டுமல்லாமல், சண்டையிடும் இரு குழுக்களிடையே சமாதானத்தை ஏற்படுத்த காவல்துறை கண்காணிப்பாளர் அஸ்ரா கார்க் முயன்றதாக உயர் நீதிமன்றம் இவரை பாராட்டியதும் நடந்தது.
மதுரை மற்றும் தருமபுரி மாவட்டங்களில் இரட்டைக் குவளை முறையை கடைபிடிக்கும் டீக்கடை உரிமையாளர்கள் மீது கார்க் பல வழக்குகளை பதிவு செய்தார், இதில் தலித் அல்லாதவர்களுக்கு துருப்பிடிக்காத ஸ்டீல் டம்ளரிலும் தலித்துகளுக்கு டிஸ்போசபிள் பிளாஸ்டிக் டம்ளரிலும் டீ கொடுப்பதை தடுத்து நிறுத்தினார்.
குற்றவாளிகளைக் கையாள்வதில் மனிதாபிமானத்தையும் வழக்குகளை கையாள்வதில் திறமையையும் காட்டிய அஸ்ரா கார்க் கணவனைக் கொன்ற பெண்ணின் விடுதலைக்கு வித்திட்டார். விசாரணையில் கொல்லப்பட்ட நபர் மகளை பலாத்காரம் செய்ய முயன்றதால் கொல்லப்பட்டது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, அந்த பெண் தற்காப்புக்காக செயல்பட்டதாகக் கூறி, ஐபிசியின் 100 வது பிரிவின் கீழ் அவரை விடுவிக்க கார்க் உத்தரவிட்டார். தேசிய அளவில் இந்த நடவடிக்கை பரபரப்பாக பேசப்பட்டது.
2013 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் உள்ள தேவதானப்பட்டியில் ஒரு இளம் பெண்ணுடன் எச்.ஐ.வி பாதித்த ஆணுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட நிலையில், திருமணத்திற்கு சில நிமிடங்களுக்கு முன்பு திருமணத்தை தடுத்தது, தருமபுரியில், 2013 -இல் சிறுநீரக வர்த்தக மோசடியை முறியடித்தது, மோசடி மன்னனைப் பிடித்ததன் மூலம், உடல் உறுப்பு ஒட்டுதல் மோசடிக்கு முற்றுப்புள்ளி வைத்தது, பெண் சிசுக்கொலையில் ஈடுபட்டவர்கள் மீது திறம்பட நடவடிக்கை எடுத்தது என இவரது இமேஜ் உயர்ந்ததால் விளைவு பல்வேறு மாவட்டங்களுக்கும் தூக்கியடிக்கப்பட்டார் அஸ்ரா கார்க்.
தனக்கு மாற்றல் உத்தரவு வந்த மறுநாளே திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் பகுதிகளில் செயல்பட்டு வந்த பெரிய செங்கல் சூளைகளில் அதிரடி நடவடிக்கை எடுத்து அங்கும் பரபரப்பை ஏற்படுத்தினார் அஸ்ரா. 'விளை நிலங்களில் இருந்து சட்டவிரோதமாக செம்மண் எடுத்து செங்கல் உற்பத்தி செய்யப்படுகிறது. சேம்பர்களில் பலரைக் கொத்தடிமைகளாக வைத்து வேலை வாங்குகின்றனர்’ என்று அவருக்கு வந்த புகாரின் அடிப்படையில் அதிரடி ஆய்வு நடந்தது. முறைகேடாக இயங்கி வந்த நான்கு சேம்பர்களைக் கண்டுபிடித்து, ஆறு பேரை உடனடியாக கைது செய்தார். நான்கு சேம்பரில் ஒன்று நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. சார்பில் வேட்பாளராக நின்ற ஒருவருடையது. மற்றவை ம.தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சி பிரமுகர்களுக்கு சொந்தமானது.
செங்கல் சூளைக்காக செம்மண் எடுத்ததில் பல நூறு கோடி அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கு கனிமவளத் துறை அதிகாரிகள் சிலர் துணை போய் உள்ளனர் என்பதையும் கண்டுபிடித்தார். அடுத்தகட்ட நடவடிக்கைக்குப் போகும் முன் அஸ்ரா கர்க்குக்கு தருமபுரி மாவட்டத்திற்கு மாற்றல் உத்தரவு வந்ததால் அனைவரும் அப்போது நிம்மதிப் பெருமூச்சு விட்டதாக சொல்லுவார்கள்.
இவர் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்தபோது திருப்பூரில் உள்ள கிளப் ஒன்றில் சீட்டு விளையாடிய பெரும்புள்ளிகள் கைது செய்யப்பட்டனர். அதில், சாதி கட்சியைச் சேர்ந்த ஒருவரும் தேசியக் கட்சியைச் சேர்ந்த தலைவர் ஒருவருடைய உறவினரும் அடக்கம். எதைப் பற்றியும் அலட்டிக்கொள்ளாமல் யாராக இருந்தாலும் கைது செய்யுங்கள் என்று கூறிவிட்டார் அஸ்ரா கர்க். இதை மானப் பிரச்சனையாக கருதிய பெரும் புள்ளிகள் தங்களின் மேலிடச் செல்வாக்கைப் பயன்படுத்தி, இவரை மாற்றுவதற்குத் தொடர்ந்து முயன்று வந்தனர். இந்தப் பிரச்சனைகளுக்கு இடையில் அந்த நேரத்தில் திருப்பூர் வந்த விஜயகாந்த், ஆளும் கட்சியை சகட்டுமேனிக்கு திட்டினாலும், 'அஸ்ரா கார்க் மிக நேர்மையான அதிகாரி’ என்று அவரைப் பாராட்டி பேசிவிட்டார். இத்தனை விஷயங்களும் ஒன்று சேர்ந்து தான், அவருடைய டிரான்ஸ்பர் நடந்தது என்று அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.
ஆனால், வேறு சில அதிகாரிகளோ, மதுரை கிரானைட் விவகாரம் பற்றி நன்கு அறிந்தவர் அஸ்ரா கார்க். அந்த ஊழலில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் சிலர் தருமபுரியிலும் தொழில் செய்கின்றனர். அதனால் அஸ்ரா கார்க் அங்கு இருந்தால் நடவடிக்கைகள் எடுக்க அரசுக்குச் சுலபமாக இருக்கும் என்பதால்தான் தருமபுரிக்கு மாற்றப்பட்டு உள்ளார். டி.என்.பி.எஸ்.சி. தேர்வு தாள் வெளியான விஷயத்தில் இன்னும் போலீசார் திணறிக் கொண்டு இருக்கின்றனர். தருமபுரியில் தான் கேள்வித்தாள் அவுட்டானது என்று கருதப்படுவதால் இதில் இன்னும் வேகமாக நடவடிக்கை மேற்கொள்ள அஸ்ரா கார்க் தான் சரியான நபர் என்று அரசு நினைத்ததால்தான் இந்த மாற்றம் என்று கூறி நிலைமையை சமாளித்தனர்.
அடுத்தடுத்த மாறுதல்களுக்கு பிறகு 2016 ஆம் ஆண்டில், அவர் மத்திய புலனாய்வுப் பிரிவுக்கு காவல்துறை கண்காணிப்பாளராக சென்று விட்டார். அப்போது குர்கானில் உள்ள ரியான் இன்டர்நேஷனல் பள்ளியில் பள்ளிக்குச் செல்லும் சிறுவன் கொலை செய்யப்பட்ட வழக்கை விசாரித்த புலனாய்வு குழுவின் தலைவராக இருந்தார். 2019 ஆம் வருடத்தில் ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட கட்டுமான நிறுவனத்தின் துணைத் தலைவர் கைது செய்யப்பட்டபோது அஸ்ரா கார்க் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்தார். சோமா எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்தின் துணைத் தலைவர் ராமச்சந்திர ராவ் பத்ரி, நிறுவனத்திற்கு எதிரான ஒரு விஷயத்தைத் தமக்கு சாதகமாக கையாள்வதற்காக அஸ்ரா கார்க்குக்கு 2 கோடி லஞ்சம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அஸ்ரா கார்க் உடனடியாக அந்நிறுவனத்தின் நிர்வாகி மீது புகார் அளித்து அவரை கைது செய்தார். விரைவிலேயே கார்க் பிப்ரவரி 2018 இல் புது டெல்லியில் உள்ள மத்திய புலனாய்வுப் பிரிவில் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரலாக (டிஐஜி) பதவி உயர்வு பெற்றார் .
இந்த நிலையில் தான், தற்போது மத்திய அரசு பணியில் இருந்து மீண்டும் தமிழகத்திற்கு தென் மண்டல ஐஜியாக திரும்பியுள்ளார் அஸ்ரா கார்க். நேர்மையாக, பாரபட்சமற்ற நடவடிக்கை எடுப்பார் என்பதால் தென்மாவட்ட போலீசார், அதிகாரிகள் சிலர் கலக்கத்தில் இருக்கின்றனர்.
முக்கியமாக தற்போது மாணவர்களிடையே வேகமாக பரவி வரும் போதை கலாச்சாரத்தை தடுக்க டி.ஜி.பி சைலேந்திரபாபு அனைத்து அதிகாரிகளையும் அழைத்து பேசியது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இந்த விஷயத்தில் தென்மாவட்ட கடத்தல் குடியான தூத்துக்குடிதான் இதன் மூல கேந்திரம் என்பதை சுட்டிக் காட்டினாராம் அஸ்ரா கார்க். அடுத்ததாக தென்மாவட்டங்களில் ஒரே இடத்தில் பதவியில் இருக்கும் உளவுத்துறையினர் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என்பதும் அரசுக்கு அஸ்ரா கார்க்கால் சொல்லப்பட்டிருக்கிறது. உதாரணமாக நெல்லை மாவட்டம் மானூரில் சமீபத்தில் நடந்த 6 கொலைகளுக்கு காரணம் காவல்துறையின் அலட்சியப்போக்கு தான் என நினைக்கிறாராம் அஸ்ரா கார்க். அதனால், உளவுத்துறையினரும் இன்ஸ்பெக்டர் மற்றும் அதற்கு மேற்பட்ட அதிகாரிகளை முதல் கட்டமாக மாறுதல் செய்தால் காவல்துறை சிறப்பாக இயங்கும் என்றும் கருதுகிறாராம் இவர்.
கடந்த 24ம் தேதி பாளை டவுன் மார்க்கெட்டில் நடந்த கொலையில் முதல் குற்றவாளியே நெல்லை காவல்துறையின் நிலஅபகரிப்பு பிரிவில் வேலை செய்யும் ஒரு சப் இன்ஸ்பெக்டர்தான் என்ற தகவல் காவல்துறையில் சில கருப்பு ஆடுகள் இருப்பதை வெளிச்சம் போட்டு காட்டியது. இதற்கு முக்கிய காரணம் இந்த எஸ்ஐ மீது கொடுக்கப்பட்ட புகார் ஒன்று மானூர் காவல் நிலையத்தில் கிடப்பில் போடப்பட்டதுதான் என்று உளவுத்துறை ரிப்போர்ட் கொடுக்க கோபத்தில் முகம் சிவந்து விட்டாராம் அஸ்ரா கார்க். அத்துடன் மானூர் பகுதிகளில் சூரிய மின்சாரம் தயாரிக்க தரிசு நிலங்களை கையகப்படுத்தி வருகின்றன சில நிறுவனங்கள். இந்த கையகப்படுத்தலில் ஒரு பாஜக கவுன்சிலர் தலையிட்டு தனக்கும் பங்கு கேட்க, இது குறித்து மானூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் சம்மந்தப்பட்டவர்கள் உயர் அதிகாரிகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்ட பிறகே அந்த பாஜக பிரமுகர் எச்சரிக்கப்பட்டாராம். இவை அனைத்தும் புகார்களாக காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு சென்றபோதும் கூட நடவடிக்கைளை வேகமாக எடுக்க முன்வராததுதான் தென்மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க் பேசி வெளியிட்ட ஆடியோ பதிவு என்றும் அதில் அந்த கருத்தும் இருக்கிறது.
இதைத்தவிர, முக்கியமாக கடந்த 1990-களின் இறுதியில் அன்றைய திமுக அரசால் காவல்துறைக்கு ஒரு அறிவுறுத்தல் தரப்பட்டது. அதன் படி சாதித் தீயில் வெந்து தணியும் தென் மாவட்டங்களில் இன்ஸ்பெக்டர் மற்றும் அதற்கு மேற்பட்ட பதவிகளில் 3 சமுதாயத்தினர் பணியாற்றுவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப் பட்டிருந்தது. அதன்படி அப்போது சமுத்திரக்கனி என்ற போலீஸ் அதிகாரி வேலூருக்கு மாற்றப்பட்டார். அதே நிலை மீண்டும் தொடர்ந்தால் காவல் துறையில் சாதிரீதியாக மோதல் ஏற்படுவது தவிர்க்கப்படும் என்று நம்மிடம் தமது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார் பெயர் சொல்ல விரும்பாத ஒரு காவல்துறை அதிகாரி.
இந்த நிலையில் அஸ்ரா கார்க் பெயரை குறிப்பிட்டு "திரும்ப வந்துட்டேன்னு சொல்லு' என மீம்ஸ்களும் பரவின. இந்த நிலையில் ரவுடிகள் கொட்டத்தை ஒடுக்கவும் பழிக்குப் பழி கொலைகளைத் தடுக்கவும் மணல் கடத்தல், குட்கா போதை போன்ற சமூக விரோத செயல்களை அடியோடு வேரறுக்கவும் தமிழக அரசால் மதுரைக்கு அனுப்ப பட்டிருக்கிறாராம் அஸ்ரா கார்க். அதன் முதல் கட்டம் தான் அவரது இந்த எச்சரிக்கை ஆடியோ பதிவு என்று பயத்துடன் சொல்கின்றனர் தென்மாவட்ட காவல்துறையினர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.