தமிழக தேர்தல் களம் விறுவிறுப்படைந்துள்ள நிலையில், மக்களிடையே வாக்குகளை சேகரிக்க அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் பலரும் பரிசுப் பொருள்கள் வழங்குவதிலும், பணப்பட்டுவாடா செய்வதிலும் மும்முறம் காட்டி வருகின்றன. இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சட்டமன்றத் தொகுதியில், திமுக சார்பில் பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருவதால் தேர்தலை ரத்து செய்யுமாறு, சுயேட்சை வேட்பாளர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
திருச்சுழி தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களம் காணும் திருப்பதி, திமுக வேட்பாளரான தங்கம்.தென்னரசு மக்களிடம் வாக்குகளைப் பெறுவதற்காக, பரிசுப் பொருள்களை வழங்கி வருவதால், இத்தொகுதியில் தேர்தலை ரத்து செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
மனுவை ஏற்று விசாரித்த உயர்நீதிமன்றம், பரிசுப் பொருள்கள் வழங்கியதாக திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசு மீதான புகாரை, தேர்தல் ஆணையம் தான் விசாரிக்க வேண்டும் என கூறியதோடு, தேர்தலை ரத்து செய்ய இயலாது என கூறி வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.
அதேபோல், சென்னையை அடுத்த பட்டாபிராமைச் சேர்ந்த எம்.ஜி.ஆர்.மக்கள் கட்சி நிர்வாகியான விஸ்வதான் என்பவர், தங்கள் கட்சிக்கு விரும்பிய சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கவில்லை என கூறி, ஆவடி தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
மனுவில், ஆவடி தொகுதியில் தங்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள டார்ச்லைட் சின்னத்தை திரும்பப் பெற்றுவிட்டு, எம்.ஜி.ஆர்.ஐ நினைவுப்படுத்தும் வகையில், ஆட்டோ சின்னத்தை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். எங்கள் கட்சி சார்பில் பிற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டிருக்கும் நிலையில், தேர்தல் சின்னப் பட்டியலில் ஆட்டோ சின்னம் இருந்தும் தனக்கு ஒதுக்கப்படாததால், தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்றும், ஆட்டோ சின்னத்தை தனக்கு வழங்க வேண்டும் எனவும் மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த மனுவை, தலைமை நீதிபதி சஞ்சய் பானர்ஜி அடங்கிய மூன்று பேர் கொண்ட அமர்வு, தேர்தல் சின்னங்கள் ஒதுக்கப்பட்டு, வாக்குப்பதிவுக்கான பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், தேர்தலை தள்ளி வைக்க முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.