/indian-express-tamil/media/media_files/2025/03/15/I8IkhUxZLduZaiJc9NTY.jpg)
ரயில்வேயில் உள்ள காலிப்பணியிடங்கள் ஆர்.ஆர்.பி. எனப்படும் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் மூலமாக நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் ரயில்வேயில் உதவி லோகோ பைலட் பதவிக்கான ஆட்சேர்ப்பு பணிக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டது. மொத்தம் 493 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கான எழுத்துத் தேர்வு முடிந்துள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் மொத்தம் 6,315 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்தக் கட்டமாக, 2-ம் நிலை தேர்வு 19-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தேர்வர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். 1,000 கிலோமீட்டர் தொலைவில் தேர்வு மையம் அமைக்கப்பட்டு இருப்பதாகவும் தேர்வர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ரயில்வே தேர்வுகளில் ஏற்கனவே வட மாநிலத்தவர்களே அதிகம் தேர்வு செய்யப்படுவதாக பரவலாக தேர்வர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டாக உள்ள நிலையில், தற்போது தேர்வு மையம் தொலை தூரங்களில் அமைக்கப்பட்டு இருப்பது சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தும் விதமாக அமைந்து இருப்பதாகவும் தேர்வர்கள் தரப்பிலும் சமூக ஆர்வலர்கள் தரப்பிலும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. பெரும்பாலான தமிழர்களுக்கு தெலுங்கானாவில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.
தமிழக மாணவர்களுக்கு மொழி தெரியாத தொலை தூர பகுதிகளுக்கு செல்லும் போது தேர்வு மையம் கண்டுபிடிப்பது முதல் பயண அலைச்சல் என பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. எனவே தேர்வு மையங்களை தமிழகத்தில் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.