நிர்மலா தேவி கூறிய பேராசிரியர் உட்பட 2 பேர் தலைமறைவு!

மாணவிகளை தவறான வழிக்கு அழைத்ததாக கைதான அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். அவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். ஒருபக்கம் சிபிசிஐடி விசாரிக்க, மறுபக்கம் ஆளுநர் நியமித்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானமும் விசாரணை நடத்தி வருகிறார்.

இன்றும் இரண்டாவது நாளாக சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் சிபிசிஐடி அலுவலகத்தில் முதல் மாடியில் வைத்து, விசாரணை அதிகாரியான சூப்பிரண்டு ராஜேஸ்வரி, உதவி அதிகாரியான துணை சூப்பிரண்டு சாஜிதா பேகம் ஆகியோர், பேராசிரியை நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்தினர்.

யாருடைய தூண்டுதலின் பேரில் மாணவிகளிடம் பேசினீர்கள்? என கேட்டபோது, காமராஜர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர்கள் கருப்பசாமி, முருகன் ஆகியோர் தான் ஆசை வார்த்தைக் கூறி தன்னை தூண்டியதாக நிர்மலா தேவி தெரிவித்துள்ளார். அவரது வாக்குமூலத்தை போலீசார் வீடியோவில் பதிவு செய்தனர். இதற்கிடையில் சி.பி.சி.ஐ.டி. குழுவினரின் ஒரு தரப்பு, காமராஜர் பல்கலைக்கழகம் சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டது. பதிவாளர் மற்றும் தேர்வாணையர் அலுவலகங்களில் சோதனை நடத்திய அவர்கள், சில முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றினர்.

இந்த நிலையில், முதல்கட்ட விசாரணையின்போது நிர்மலாதேவி கூறிய பேராசிரியர் உட்பட 2 பேர் தற்போது தலைமறைவாகியுள்ளனர். மதுரை காமராஜர் பல்கலை. துணை பேராசிரியர் முருகன், முன்னாள் மாணவர் கருப்பசாமி ஆகியோர் தலைமறைவாகியுள்ளனர். 2 பேரையும் தேடி காவல்துறையினர் அவர்களுடைய வீட்டிற்கு சென்றபோது தலைமறைவானது தெரிய வந்துள்ளது.

 

 

×Close
×Close