”அஸ்வினியை படிக்க வைத்ததே நான் தான்” : போலீஸ் விசாரணையில் அழகேசன் வாக்குமூலம்!

ஒரு கட்டத்தில், என்னுடைய அவசர குணத்தினால், அஸ்வினிக்கும் தாலி கட்டினேன்.

கே.கே நகரில் தனியார் கல்லூரி வாசலில் கொலைச்செய்யப்பட்ட அஸ்வினியின் மரணம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்து வருகின்றன.

நேற்று (9.3.18) மாலை கே.கே நகர் மீனாட்சி கல்லூரி  வாசலில்  இளம்பெண் ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியானது   ஆட்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் அந்த பகுதியில் பட்டப்பகலில் இளம்பெண் கொலை செய்யப்பட்டது சென்னை முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதன் பின்பு நடத்தப்பட்ட விசாரணையில்,  கொலை செய்யப்பட்ட அந்த பெண்ணின் பெயர் அஸ்வினி,சென்னை மதுரவாயலைச் சேர்ந்தவர் என்றும், மீனாட்சி கல்லூரில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தவர் என்று தெரிய வந்தது. காதல் விவகாரத்தினால் தான் இந்த கொலை நிகழ்த்தப்பட்டது என்று செய்திகள் வெளியானது.

இந்த கொலையை நேரில் பார்த்த பொதுமக்கள் கண்ணில் பயத்துடன் செய்தியாளர்களிடன் நடந்தவற்றை விவரித்தனர்.  அஸ்வினியும் அவரது தோழியும் கல்லூரியில் இருந்து லோகநாதன் தெரு வழியாக நடந்து வந்ததனர், அவர்களுக்கு பின்னால், இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் அஸ்வினியின் பெயரைச் சொல்லி அழைத்துள்ளார். உடனே, அஸ்வினி தனது தோழிகளை ஓரமாக நிற்கச் சொல்லிவிட்டு அந்த இளைஞரிடம் சற்று கோபத்துடன் பேசியுள்ளார்.  அந்த வழியே சென்ற அனைவரும் இதைப் பார்த்துள்ளனர்.

அவர்கள் இருவரும் வழக்கமாக தெருக்களில் நின்று பேசிக்கொள்ளும் காதல் ஜோடிகள் போல என நினைத்து சாதரணமாக அவர்களை பலர் கடந்து சென்றுள்ளனர். கண் இமைக்கும் நேரத்தில் தனது சட்டையில் இருந்த கத்தியை எடுத்து அந்த இளைஞர் அருகில் நின்று பேசிக் கொண்டிருந்த அஸ்வினியின் கழுத்தை அறுத்துள்ளான். அறுத்தது மட்டுமில்லாமல் “எனக்கு கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்கக் கூடாது.நானும் உன்னுடனே வருகிறேன்” என்று சொல்லி, வண்டியில் இருந்த மண்ணெய்யை  எடுத்துள்ளான்.

ரத்த வெள்ளத்தில் அஸ்வினி கீழே சரிந்துள்ளார். இதைப் பார்த்த அஸ்வினியின் தோழிகள்  அலறி துடித்துள்ளனர். இவர்களின் சத்தத்தைக் கேட்டு பொதுமக்கள் அனைவரும் ஓடி வந்துள்ளனர். அதன் பிறகு தான் தற்கொலைக்கு முயன்ற அந்த இளைஞரை சரமாரியாக அடித்து கையிற்றில் கட்டி போட்டுள்ளனர்.

பின்பு, அஸ்வினியை  மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸிற்கு கால் செய்துள்ளனர். அதே கையோடு காவல் நிலையத்திற்கு, ஃபோன் செய்து விபரத்தை கூறியுள்ளனர்.  சம்பவ இடத்திற்கு போலீசே வந்த பிறகும் கூட, ஆம்புலன்ஸ் வரவில்லையாம். சுமார் 40 நிமிடங்கள் கழித்து தான் ஆம்புலன்ஸ் வந்துள்ளது. அதற்குள்  அஸ்வினி பரிதாபமாக  இறந்துள்ளார்.  தற்போது அவரின் உடலுக்கு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் உடற்கூறு நடைப்பெற்று வருகிறது.

மருத்துவமனையைச் சுற்றி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.  இதற்கிடையில், பொதுமக்கள் அடித்ததால் பலத்த காயமடைந்த அந்த இளைஞரை காவல் துறையினர் மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி சிகிச்சைகளை வழங்கினர். அதன் பின்பு அவரிடம் சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையில் தான் திடுக்கிடும் பல தகவல்கள் வெளிவந்துள்ளன.

போலீஸ் விசாரணையில் இளைஞன் கூறியது, “ என் பெயர் அழகேசன். மதுரவாயலைச் சேர்ந்த நான் மாநகராட்சி ஒப்பந்த ஊழியராக ( கொசு மருந்து அடிப்பவர்) பணியாற்றி வருகிறேன். அஸ்வினியும் என்னுடைய ஏரியா தான்.  அவளும் நானும் முதலில் நண்பர்களாக பழகி வந்தோம். அதன் பின்பு காதலாக மாறியது, முதலில் காதலை மறுத்த அஸ்வினி பிறகு ஏற்றுக் கொண்டார். இருந்தாலும், பார்ப்பதற்கு அழகாகவும், கல்லூரியில் படிப்பதால் அஸ்வினிக்கு நான் எந்த விதத்திலும் தகுதியானவன் இல்லை என்ற எண்ணம் எனக்கு பலமுறை ஏற்பட்டுள்ளது.

இதுக் குறித்து நான் அஸ்வினியிடம் பலமுறை கேட்டுள்ளேன்.அப்போதெல்லாம் அவள் இதில் என்ன இருக்கிறது உனக்கு நல்ல மனசு இருக்கிறது அதுவே போகும் என்று சொல்வார். இப்படி சுமூகமாகப் போய்க்கொண்டிருந்த எங்கள் காதல் விவகாரம் அஸ்வினியின் தாயிற்கு தெரிந்து விட்டது. அஸ்வினிக்கு தந்தை கிடையாது. தாயினில் வளர்ப்பில் வளர்ந்ததால், அவளுக்கு அம்மாவை ரொம்ப பிடிக்கும், அவங்க என்ன சொன்னாலும் கேட்பா.

என்னுடைய கல்வி தகுதி, அழகு , ஜாதி இவற்றை சுட்டிக்காட்டி அஸ்வினியின் தாய் என்னை ஏற்க மறுத்தார். அதுமட்டுமில்லாமல் என்னைப் பற்றி அஸ்வினியிடம் தவறாக சித்தரிக்க ஆரம்பித்தார். இதனால் அஸ்வினி என்னை விட்டு விலகிச் செல்ல ஆரம்பித்தாள். இதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஒரு கட்டத்தில், என்னுடைய அவசர குணத்தினால், அஸ்வினிக்கும் தாலி கட்டினேன்.

இதனால், என்னை சுத்தமாக அஸ்வினி வெறுத்து விட்டார். அதன் பின்பு, மதுரவாயலில் இருந்தால், என்னை தினமும் பார்க்க நேரிடும் என்று அவளின் உறவினர் வீட்டிற்கு அஸ்வினியை அவளின் அம்மா அனுப்பி விட்டார். அங்கு சென்றும் நான் அஸ்வினியிடம் பேச முயற்சித்தேன். இதனால், கோபத்தில் அஸ்வினி என் மீது கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். நான் கட்டிய தாலியையும் கழற்றி எரிந்து விட்டார்.

இதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இருப்பினும், போலீசாரின் வற்புறுத்ததால், இனி மேல் அஸ்வினியை தொல்லை செய்ய மாட்டேன் என்றும்,  அவளுக்கும் எனக்குமான உறவு முடிந்து விட்டது என்று என கைப்பட காவல் நிலையத்தில்  எழுதி தந்துவிட்டேன்.

இருந்த போது, அஸ்வினியை என்னால் மறக்க முடியவில்லை. என்னைப் பற்றி அவர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், அவளின் காதலுக்கு நான் தகுதியானவன் இல்லை என்பதால் என்னை நிராகரித்ததாக கூறியிருந்தார். நான் 10 வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தேன் ஆனால், அஸ்வினி பட்டப்படிப்பை தொடர வேண்டும் என்பதற்காக பலமுறை என் வீட்டிற்கே தெரியாமல் 2 லட்சம் வரை அவளுக்காக கல்லூரியில் ஃபீஸ் கட்டினேன்.

இது எல்லாவற்றையும் மறந்து விட்டு, அஸ்வினி அவளின் தாயின் பேச்சைக் கேட்டது என்னால் ஜீரணிக்க முடியவில்லை.அதனால் தான் அவளை கொன்று விட்டு, நானும் தற்கொலை செய்துக் கொள்ள முடிவேடுத்தேன். அதற்குள் பொதுமக்கள் என்னைப் பிடித்து அடித்து விட்டனர்” என்று திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார்.

 

×Close
×Close