மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த அஸ்வினி எனும் கல்லூரி மாணவி, கே.கே.நகரில் உள்ள மீனாட்சி கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இன்று அவர் கல்லூரி முடிந்து வெளியே வந்த போது, அழகேசன் எனும் நபர் அவரை கழுத்தறுத்து கொலை செய்துள்ளார்.
பட்டப்பகலில், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில், கல்லூரி வாயில் அருகிலேயே, ஒரு கல்லூரி மாணவியின் கழுத்தை அறுத்து கொலை நடந்திருப்பது நம்மை பதைபதைக்க வைக்கிறது. இதுபோன்று கொலை செய்பவர்களுக்கு எங்கிருந்து தைரியம் வருகிறது?
அஸ்வினியின் இந்த படுகொலை போன்று, இதற்கு முன் நடந்த சில சம்பவம் குறித்து இங்கே பார்ப்போம்.
கடந்த ஆண்டு (2017), சிவகங்கை மாவட்டம், மானா மதுரையைச் சேர்ந்த சோனாலி(19), கரூர் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவரை அதே கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர் உதயகுமார் (21) என்பவர் ஒருதலையாக காதலித்து வந்தார். ஆனால், இவரது காதலை சோனாலி ஏற்காததால், வகுப்பறைக்கே புகுந்து சக மாணவ, மாணவியரின் முன்னிலையிலேயே கட்டையால் அடித்துக் கொலை செய்தார்.
2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம், ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள அடுத்தகுடி கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர், அங்குள்ள கல்லூரி ஒன்றில் படித்து வந்தார். இவரது உறவினரான குமார் என்ற வாலிபர், தன்னை திருமணம் செய்யக் கோரி தொடர்ந்து அந்தப் பெண்னை தொந்தரவு செய்து வந்துள்ளார். ஆனால், அவர் மறுக்கவே, கல்லூரி அருகே கையில் வைத்திருந்த கத்தியால் அப்பெண்ணின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் கொலை செய்யப்பட்ட சுவாதி குறித்து நம் அனைவருக்குமே தெரியும். 2016ம் ஆண்டு ஜூன் மாதம் இந்த கோர சம்பவம் அரங்கேறியது.
2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம், கடலூரில் உள்ள பிரபல புனித ஜோசப் கல்லூரியில் படித்து வந்த மகாலட்சுமி என்ற மாணவி, கல்லூரி வாசலிலேயே காதல் விவகாரத்தால் கழுத்தை அறுத்துப் படுகொலை செய்யப்பட்டார்.
இவையெல்லாம் ஒருவகை என்றால், சமீபத்தில் நடந்த சம்பவம் நம்மை மேலும் திகிலடைய வைத்தது. சென்னை பல்லாவரத்தை அடுத்த பஞ்சாயத்து காலினியில், கல்லூரி மாணவியான கீர்த்திகா என்பவர், தனது முன்னாள் காதலனின் தொல்லை பற்றி இந்நாள் காதலனிடம் கூற, அவர் முன்னாள் காதலன் வீட்டின் மீது வெடிகுண்டே வீசி போலீசாரை அதிர வைத்தார்.