அத்திவரதர் சிலை வைக்கப்பட உள்ள அனந்தசரஸ் குளத்தில் நிரப்ப உள்ள தண்ணீரின் தரம் குறித்து அறிக்கை அளிக்கும்படி தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்திவரதர் சிலை வைக்கப்படும் அனந்தசரஸ் குளத்தை தூர்வாரக் கோரிய வழக்கு, நீதிபதி ஆதிகேசவலு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அனந்த சரஸ் குளத்தில் உள்ள ஆழ்துளை கிணறு மற்றும், பொற்றாமரை குளத்தில் உள்ள தண்ணீர் குடிக்கும் தகுதி உடையவை என மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. குளம் சுத்தம் செய்யும் பணியில் சி.ஐ.எஸ்.எப் வீரர்களை ஏன் உபயோகப்படுத்த கூடாது என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அதற்கு ஆட்சேபம் தெரிவித்த அறநிலையத்துறை, இத்தனை நாட்களாக பணியை உள்ளூர் வாசிகளும், அறநிலையத்துறையும் செய்துள்ள நிலையில், கடைசி நேரத்தில் எப்படி சி ஐ எஸ் எப் வீரர்களை அனுமதிக்க முடியும் என தெரிவித்தார். மேலும், இன்று காலையில் இருந்து பிளாஸ்டிக் மற்றும் கழிவுகளை சுத்தம் செய்யும் பணியில் தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருவதாகவும், முழுமையாக விரைவில் பணி முடிவடையும் என அறநிலைய துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.அதையேற்ற நீதிபதி, சி ஐ எஸ் எப் வீரர்கள் வேண்டாம் என தெரிவித்தார்.
பின்னர் அத்திவரதரை குளத்தில் இறக்கி அறையில் வைத்தவுடன், அந்த அறையில் மட்டும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை நிரப்ப உத்தரவிட்டுள்ளார். மேலும், தண்ணீரின் தரம் குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் அளிக்கும் அறிக்கையை பொறுத்து எந்த தண்ணீரை குளத்தில் நிரப்பலாம் என உத்தரவு பிறப்பிப்பதாகக் கூறிய நீதிபதி, விசாரணையை ஆகஸ்ட் 19ம் தேதிக்கு தள்ளவைத்தார்.