Athi Varadar Darshan 2019 : அத்தி வரதர் தரிசனத்திற்காக, தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் காஞ்சிபுரத்தில் குவிந்து வருகின்றனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஹோட்டல்கள், உணவுப்பண்டங்களின் விலைகளை தாறுமாறாக உயர்த்திவிட்டன. ஆன்லைன் கட்டணங்களில் உள்ள குளறுபடியால் அத்திவரதர் தரிசனத்திற்காக அவதிக்குள்ளான பக்தர்களுக்கு, உணவுப்பொருட்களின் விலையுயயர்வு மேலும் பாதிப்பை தரவல்லதாக உள்ளது.
அத்திவரதர் தரிசனம் ஜூலை 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 17ம் தேதி வரை நடைபெற்று வருகிறது. சயன கோலத்தில் இருந்த அத்திவரதரை காண தினந்தோறும் 1 லட்சம் பக்தர்கள் வருகை தந்திருந்தனர். இந்நிலையில், அத்திவரதர் நேற்று ( ஆகஸ்ட் 1) முதல் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இந்த கோலத்தை காண , மேலும் அதிக பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொது தரிசன வரிசையில் அத்திவரதரை தரிசிக்க 6 மணிநேரத்திற்கும் மேல் ஆவதால், சிறப்பு தரிசனத்திற்கு பெரும்பாலோனோர் முக்கியத்துவம் அளிக்கின்றனர். சிறப்பு தரிசன டிக்கெட், தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை இணையதளத்தில் மட்டும் கிடைக்கின்றன. அதிகம் பேர் சிறப்பு தரிசன டிக்கெட் எடுக்க முயன்றதன் காரணமாக, வியாழக்கிழமை, அறநிலையத்துறை இணையதளம் முடங்கியது. அன்றைய தினத்தில் மட்டும் 250 டிக்கெட்டுகள் மட்டுமே எடுக்க முடிந்தது. சகஸ்ரநாம தரிசனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் டிக்கெட்டுகளை எடுக்க முடியாமல் பக்தர்கள் மிகுந்த சிரமப்பட்டனர்.
காலை 5 மணி முதல் இரவு 9.30 மணி வரை பக்தர்கள் பொது தரிசனத்திலும், மாலை 6.30 முதல் இரவு 9.30 மணிவரை ரூ.300 மதிப்பிலான சிறப்பு தரிசன டிக்கெட் வரிசையிலும், காலை 5.30 மணியிலிருந்து மாலை 5.30 மணிவரை வி.ஐ.பி மற்றும் டோனர் பாஸ் வைத்திருப்பவர்கள், காலை மற்றும் மாலை வேளைகளில் சகஸ்ரநாம தரிசனம் என அத்திவரதர் தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
அத்திவரதரை தரிசிக்க தமிழகம் மட்டுமல்லாது நாட்டின் பலபகுதிகளிலிருந்து காஞ்சிபுரத்திற்கு பக்தர்கள் அதிகளவில் வருகின்றனர். பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதன காரணமாக, அங்குள்ள தங்கும் வசதி கொண்ட ஹோட்டல்கள் மற்றும் லாட்ஜ்களில், ஒரு இரவு தங்க ரூ.5 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவதால், பக்தர்கள் பாதிப்பு அடைந்துள்ளனர்.
பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாக, அங்குள்ள 3 நட்சத்திர ஹோட்டல்களில், ஒரு இரவு தங்குவதற்கான கட்டணம் ரூ.8 ஆயிரம் வரை அதிகரிக்க திட்டமிட்டிருப்பதாக ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், திமுக தலைவர் ஸ்டாலினின் மனைவி துர்கா , முன்னாள் முதல்வர் கருணாநிதியின் துணைவி ராசாத்தி அம்மாள் உள்ளிட்டோர் அத்திவரதர் தரிசனம் செய்துள்ளனர். இதுவரை 34 லட்சம் பேர் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த அத்திவரதர் திருவிழாவில், தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாததால், பக்தர்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகிறார்கள் என்பதே சோகமான செய்தி....
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.