அத்திக்கடவு - அவிநாசி திட்டம், ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் 65 ஆண்டுகளாக கனவாகும். நீண்ட போராட்டம், கோரிக்கைகளுக்குப் பிறகு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
ரூ.1916.41 கோடி செலவில் நிறைவேற்றப்பட்டுள்ள அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஆக.17) சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காலை 10 மணியளவில் காணொலி வாயிலாக தொடங்கி வைக்கிறார்.
அத்திக்கடவு - அவினாசி திட்டம் என்பது, பில்லூர் அருகில் உள்ள பவானி ஆற்றிலிருந்து வெளியேறும் 2,000 கனஅடி வெள்ள உபரி நீரை, கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களிலுள்ள வறட்சியான பகுதிகளின் நீர்நிலைகளில் நிரப்பி பயன்படுத்துவதற்காக கொண்டு வரப்பட்டது.
இத்திட்டத்தின் மூலம் மேட்டுப்பாளையம், அன்னூர், திருப்பூர், அவினாசி, சேவூர், பெருந்துறை, காங்கேயம், ஊத்துக்குளி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 31 ஏரிகளும், 1,045 குளம், குட்டைகளும் நீராதாரத்தை பெறும்.
இத்திட்டத்தின் மூலம் 3 மாவட்டங்களை சேர்ந்த 50 லட்சம் விவசாய மக்கள் பயன்பெறுவர். விவசாயம், குடிநீர் உள்ளிட்ட தேவைகளை பூர்த்தி செய்வது, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவது ஆகியவை இத்திட்டத்தின் பிரதான நோக்கமாக உள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டு எடப்பாடி பழனிசாமி காலத்தில் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டு தற்போது திட்டம் முடிவடைந்துள்ளது.
2016-ல் அப்போதை முதல்வர் ஜெயலலிதா ரூ. 3.27 கோடி மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்து, நிர்வாக ஒப்புதல் அளித்து அரசிதழில் வெளியிட்டார். பின்னர் 2018-ல் இ.பி.எஸ் ஆட்சியில் ரூ.250 கோடி ஒதுக்கப்பட்டு அத்திக்கடவு திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.
2019-ல் ரூ.1,652 கோடி ஒதுக்கப்பட்டு அப்போது இ.பி.எஸ் தலைமையில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“