அத்திவரதர் தரிசனத்தை மேலும் 48 நாள் நீட்டிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் அத்திவரதர் தரிசனத்திற்காக கூட்டம் அலைமோதுகிறது. தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்துக்காக வந்து செல்கின்றனர். இதனால் பக்தர்கள் பல மணிநேரம் காத்திருந்து அத்திவரதரை தரிசனம் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதுவரை சுமார் 80 லட்சம் பேர் அத்திவரதரை தரிசித்துள்ளனர்.
இன்னும் 3 நாட்களே எஞ்சியுள்ள நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஆதிகேசவலு முன் வழக்கறிஞர் பிரபாகரன் இன்று ஆஜராகி, முறையீடு செய்தார். அத்திவரதரை தரிசிக்க தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். இன்னும் ஏராளமானோர் பார்க்க ஆர்வமாக உள்ளனர். எனவே, அத்திவரதர் தரிசனத்தை மேலும் ஒரு மண்டலம் நீட்டிக்குமாறு இந்து சமய அறநிலையத்துறை, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம், மற்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று முறையிட்டார்.
இதை கேட்ட நீதிபதி, இது தொடர்பாக மனு தாக்கல் செய்யுங்கள். விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அனுமதி அளித்தார். இதனையடுத்து இது தொடர்பாக அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த தமிழரசி என்பவர் அத்திவரதர் தரிசனத்தை மேலும் 48 நாள் நீட்டிக்க கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.