காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் ஜூலை 1 ம் தேதி துவங்கிய அத்திவரதர் வைபவம் இன்றுடன் நிறைவடைகிறது. 40 ஆண்டுகளுக்கு பின் அனந்தசரஸ் திருக்குளத்தில் இருந்து வெளிப்பட்டிருக்கும் அத்திவரதர் ஜூலை 1 ம் தேதி துவங்கி, முதல் 24 நாட்கள் சயன கோலத்திலும், ஆகஸ்ட் 1 முதல் நின்ற கோலத்திலும் அருள்பாலித்து வருகிறார். 48 நாட்கள் நடக்கும் அத்திவரதர் வைபவம் இன்றுடன் நிறைவடைகிறது. 48 வது நாளாவது நாளான நாளை (ஆக.,17) காலை துவங்கி அத்திவரதருக்கு 6 கால பூஜைகள் ஆகம விதிப்படி நடைபெற உள்ளது. அதன் பிறகு அத்திவரதரை மீண்டும் அனந்தசரஸ் குளத்திற்குள் கொண்டு செல்லும் பணிகள் நடைபெறும்.
1 கோடி பேர் தரிசனம் : அத்திவரதரை இதுவரை ஒரு கோடியே 4 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர். வெளி மாநிலங்களில் இருந்து பக்தர்கள் பல மணிநேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து அத்திவரதரை தரிசித்து சென்றுள்ளனர்.
நாளை ( ஆகஸ்ட் 17ம் தேதி) அனந்தசரஸ் குளத்திற்குள் செல்லும் அத்திவரதர், மீண்டும் 2059 ம் ஆண்டே திருக்குளத்தில் இருந்து வெளிப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
போலீசாருக்கு டிஜிபி பாராட்டு : அத்திவரதர் தரிசனத்திற்காக காஞ்சிபுரத்தில் மக்கள் வெள்ளம் போல திரண்டுவந்தநேரத்திலும், கடமைதவறாது நேரங்காலம் பார்க்காமல், மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தி, அவர்களை உரிய நேரத்தில் சாமி தரிசனம் செய்யும் வகையிலான அரும்பணியை துரிதமாக செய்ய உதவிய மாநில போலீசாருக்கு தனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்வதாக போலீஸ் டிஜிபி திரிபாதி தெரிவித்துள்ளார்.
உயர்நீதிமன்றம் மறுப்பு : அத்திவரதர் சயன கோலத்தில் மற்றும் நின்ற கோலங்களில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்னும் நிறைய மக்கள் பார்க்காமல் இருக்கிறார்கள் அவர்களுக்காக, அத்திவரதர் தரிசன காலத்தை மேலும் சில காலங்கள் நீட்டிக்க வேண்டும் என்று பக்தர் ஒருவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, தரிசன காலத்தை நீட்டிக்க முடியாது என்று உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்தனர்.
குழந்தைக்கு அத்திவரதர் பெயர் : அத்திவரதர் தரிசனம் செய்ய வந்த கர்ப்பிணிக்கு, கோயிலின் 16 கால்மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாமில், கடந்த 13ம் தேதி குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு, பெற்றோர், அத்திவரதர் என்றே பெயர் சூட்டியுள்ளனர்.
பக்தர்கள் காயம் : அத்திவரதர் தரிசனத்திற்காக வரிசையில் பக்தர்கள் காத்திருந்தபோது, விஐபி வரிசையில் ஏற்பட்ட குளறுபடியால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பல பக்தர்கள் காயமடைந்தனர். சிலருக்கு மூச்சுதிணறல் ஏற்பட்ட நிலையில், அவர்களுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சைகள் வழங்கப்பட்டன.
இருவர் பலி : அத்திவரதர் தரிசனத்திற்காக வரிசையில் பக்தர்கள் காத்திருந்தபோது, மாரடைப்பு ஏற்பட்டு பொள்ளாச்சியை சேர்ந்த லட்சுமணன், நீலகிரியை சேர்ந்த ரத்தினம் உள்ளிட்ட பக்தர்கள், மருத்துமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தனர்.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை : 16ம் தேதியுடன் அத்திவரதர் தரிசனம் முடிவடைய உள்ள நிலையில், இறுதிநேரத்தில் மக்கள் கூட்டம் அதிகரிக்கும் என்ற காரணத்தினால், முன்னெச்சரிக்க நடவடிக்கையாக, ஆகஸ்ட் 13, 14 மற்றும் 16ம் தேதிகளில் காஞ்சிபுரத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
பிரபலங்கள் தரிசனம் : ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், பா.ஜ மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி, நடிகர்கள் ரஜினிகாந்த், நடிகை த்ரிஷா, நயன்தாரா உள்ளிட்ட பிரபலங்கள் அத்திவரதரை தரிசனம் செய்தனர்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Athivaradar darshan highlights