அத்திவரதர் திருவிழாவிற்கு என, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் போதிய அடிப்படை வசதிகளை செய்யவில்லை. மக்கள் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த யாரும் நியமிக்கப்படவில்லை. தரிசனத்திற்கு அதிக நேரம் ஆகிறது என்று மாவட்ட நிர்வாகம் மீது மக்கள் அடுக்கடுக்காக புகார்களை கூறியுள்ளனர்.
40 ஆண்டுகளுக்கு ஒருமுறை குளத்திலிருந்து வெளியே வந்து மக்களுக்கு அருள்பாலிக்கும் அத்திவரதர், இந்தாண்டு வெளியே வந்துள்ளார். ஜூலை 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 17ம் தேதி வரை 48 நாட்கள், அத்திவரதரை தரிசிக்கும் பொருட்டு அத்திவரதர் திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவிற்கான போதிய அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படவில்லை என பக்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மக்கள் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த போதிய அளவிற்கு ஆட்கள் நியமிக்கப்படவில்லை. முதியோர்கள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு அத்திவரதர் தரிசனம் ஒரு கச்ப்பான அனுபவமாக அமைந்துள்ளதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்தி வரதரை தரிசிக்க நாள் ஒன்றிற்கு 30 முதல் 50 ஆயிரம் பக்தர்கள் வரை வருவர் என்று மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டிருந்தது. ஆனால், நாள் ஒன்றிற்கு 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அத்திவரதரை தரிசிக்க காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு வருகை தருகின்றனர். இந்தளவிற்கு பக்தர்கள் வருவார்கள் என்று மாவட்ட நிர்வாகம் கனவிலும் நினைத்து பார்க்கவில்லை. மேலும் மக்களின் அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவறை உள்ளிட்ட வசதிகள் செய்துதரப்படவில்லை. மக்கள் கூட்டநெரிசலை கட்டுப்படுத்த போதுமான ஆட்கள் நியமிக்கப்படவில்லை. வரிசையில் செல்லாமல், மக்கள் மொத்தமாக செல்வதால், ஒரு ஒழுங்கு இல்லாமல், தரிசனம் செய்ய அதிக நேரம் பிடிக்கிறது.
மாலினி ஐயர்
அத்திவரதர் தரிசனத்திற்காக 6 மணிநேரம் காத்து இருந்தோம். அவர்கள் இன்னும் 30 நிமிடங்கள் காத்திருக்க சொல்கிறார்கள், ஏன் என்று கேட்டால் அதற்கு பதில் இல்லை. 6 மணிநேரத்திற்கும் மேலாக, கால்நடைகள் கெட்டிலில் அடைக்கப்பட்டுள்ளதுபோன்று அடைக்கப்பட்டுள்ளோம். கோயிலுக்கு நடந்து செல்ல சரியான சாலைவசதி இல்லை. வெயிலிருந்து தப்பிக்க மேற்கூரைகள் இல்லை. இதை நான் குற்றம் சுமத்தவேண்டும் என்பதற்காகவோ அல்லது விளம்பர மோகத்திலோ சொல்லவில்லை என்று கூறியுள்ள மாலினி ஐயர், இந்த விசயத்தை, பிரதமர் மோடிக்கும் டுவிட்டரில் மென்சன் செய்துள்ளார்.
வெங்கட்ரமணன்
அத்திவரதர் தரிசனத்திற்கு காஞ்சிபுரத்தில் திரண்டுள்ள கூட்டம். மக்கள் வசதியாக பார்க்க வரிசை அமைக்கப்படாததால், அந்த சாலையே மக்கள் வெள்ளத்தால் அடைபட்டு கிடக்கிறது.
அத்திவரதரை இடம் மாற்ற வாய்ப்பில்லை : காஞ்சிபுரத்தில் தற்போது பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் அத்திவரதரை இடம் மாற்ற வாய்ப்பில்லை என்று இந்துசமய அறநிலையத்துறை முதன்மை செயலாளர் பனீந்தர ரெட்டி கூறியுள்ளார்.
அத்திவரதரை காண்பதற்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அவர்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து சிரமப்படுவதால், அத்திவரதரை இடமாற்ற வேண்டும் என்று பக்தர்களில் ஒரு தரப்பினர் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், பனீந்தர ரெட்டியின் பதில் முக்கியத்துவம் பெறுகிறது