திருச்சி திமுகவில் ஆரம்ப காலத்தில் இருந்தே நேருவின் ஆதரவாளர்களுக்கும், எம்.பி சிவாவின் ஆதரவாளர்களுக்கும் அவ்வப்போது மோதல் எழுவது சகஜம்.
இந்த உட்கட்சி பூசல் மறைந்த கலைஞர் காலத்தில இருந்தே இருந்து வந்துள்ளது. எத்தனையோ முறை இதற்கு முடிவு கட்ட முயன்றார் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி.
அவரது முயற்சிகள் பெரும்பாலும் தோல்வியில் தான் முடிந்தன. திமுகவில் அசைக்க முடியாத சக்தியாக வளர்ந்து இருக்கும் அமைச்சர் கே.என்.நேருவை கடந்து திமுகவில் அரசியல் செய்யும் யாரும் திருச்சியில் வளர முடியாத நிலை தான்.
அந்த வகையில் தான் இன்று அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளர்களால் திருச்சி சங்கம் ஹோட்டல் அருகே உள்ள ஸ்டேட் பேங்க் ஆபீஸர்ஸ் காலனி குடியிருப்பு பகுதியில் குடியிருக்கும் எம்பி சிவா வீடு மீது திடீரென திமுகவினர் தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்த விபரம் வருமாறு;
திமுகவின் பேச்சாளர்களில் முக்கியத்துவம் வாய்ந்தவரும் திமுக மாநிலங்களவை குழு தலைவருமான எம் பி சிவா வீடு திருச்சி கன்டோன்மென்ட் சங்கம் ஹோட்டல் அருகே உள்ள ஸ்டேட் பாங்க் ஆபிஸர்ஸ் காலனி பகுதியில் உள்ளது.
இந்த வீட்டில் இன்று காலை திடீரென திமுக கரைவேட்டி கட்டிய கும்பல் ஒன்று உள்ளே புகுந்து ஜன்னல், நாற்காலி, வீட்டு வாசலில் நிறுத்தி இருந்த சொகுசு கார், இருசக்கர வாகனம் உள்ளிட்டவைகளை அடித்து நொறுக்கியதொடு சோடா பாட்டில்களையும் வீசினர்.
இந்த பகுதியில் திருச்சியில் முக்கிய பிரமுகர்கள் பலரும் வசித்து வரும் நிலையில், இந்த பகுதியில் உடனடியாக போலீஸார் குவிக்கப்பட்டனர்.
இதனால் திருச்சியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. அமைச்சர் கே என் நேரு இன்று காலை அதே பகுதியில் , புதிதாக அமைக்கப்பட்டுள்ள இறகு பந்து அரங்கம் திறப்பு விழாவில் பங்கேற்க வந்தார்.
அமைச்சரோடு மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் வந்துள்ளனர்.
சிவா வீட்டு அருகிலேயே உள்ள இந்த இறகு பந்து அரங்கத்தின் திறப்பு விழா கல்வெட்டில் திமுக எம்பி சிவாவின் பெயர் இடம் பெறவில்லை, வரவேற்பு பேனரிலும் சிவாவின் பெயர் இடம் பெறவில்லை என்ற காரணத்தினால் சிவாவின் ஆதரவாளர்கள் சிலர் அமைச்சர் கே.என்.நேரு அங்கே வரும் பொழுது கருப்புக்கொடி காட்டி, நேருவின் வாகனத்தை மறித்து நேருக்கு எதிராக கோஷம் எழுப்பி இருக்கின்றனர்.
-
திமுக மாநிலங்களவை எம்பி திருச்சி சிவா வீடு மீது தாக்குதல்
இதனால் ஒரே கட்சியைச் சேர்ந்த இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. அமைச்சர் கே என் நேருவை போலீசார் பாதுகாப்புடன் திறப்பு விழா அழைத்துச் சென்றனர்.
இந்த நிலையில் அமைச்சர் கே என் நேருவுக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற திமுக எம்பி சிவாவின் ஆதரவாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளர்கள் திமுக எம்பி சிவா வீடு மீது சோடா பாட்டில் கொண்டு தாக்குதல் நடத்தியதோடு வீட்டிற்கு உள்ளே சென்று கதவு ஜன்னல் கண்ணாடியை அடித்து நொறுக்கினர்.
இந்த தாக்குதலில் சிவாவின் சொகுசு கார் இருசக்கர வாகனம் உள்ளிட்ட பொருட்கள் பெரும் சேதம் அடைந்தது. சிவா வீட்டின் முன்பு பொருத்தப்பட்டுள்ள கேமராவின் காட்சியை அடிப்படையாகக் கொண்டு சிவா வீட்டை தாக்கியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
போலீசார் சிவா வீட்டிற்கு பலத்த பாதுகாப்பை ஏற்படுத்தியுள்ளனர். அதே நேரம் கருப்பு கொடி காட்ட முயற்சி செய்ததாக எம் பி சிவாவின் ஆதரவாளர்களை நீதிமன்ற காவல் நிலைய போலீசார் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்த போது அங்கேயும் அத்துமீறி உள்ளே நுழைந்த கே.என். நேருவின் ஆதரவாளர்கள் சிவாவின் ஆதரவாளர்களை தாக்கியுள்ளனர்.
அரசு திட்டத்தில் விளையாட்டு அரங்கம் துவக்க விழாவில், ராஜ்யசபா எம்பியான சிவாவுக்கு அழைப்பு விடுக்காதது, அவரது ஆதரவாளர்கள் தரப்பில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதனால், அமைச்சர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் சென்றபோது, சிவாவின் ஆதரவாளர்கள் கருப்பு கொடி காட்டி உள்ளனர். ஆகையால் அமைச்சரும் அவருடன் சென்றவர்களும் கார்களை நிறுத்தாமல் சென்றுவிட்டனர்.
இறகுப்பந்து விளையாட்டு அரங்கம் திறப்பு விழா முடிந்து, அமைச்சர் புறப்பட்டு சென்றதும், அவரோடு வந்த ஆதரவாளர்கள் எம். பி. சிவாவின் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த கார் மட்டும் வீட்டு, ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்டனர்.
திருச்சியில் திமுக எம். பி. வீட்டில் திமுக அமைச்சரின் ஆதரவாளர்களே புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் திமுக கட்சியில் நீண்ட ஆண்டு காலமாக இருக்கும் அமைச்சர் கே. என். நேருக்கும் , திருச்சி சிவா விற்கும் ஏற்பட்ட மோதல் அக்கட்சியின் மத்தியில் பெரும் சலசலப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
திமுகவின் உட்கட்சி மோதலால் காவல் நிலையத்திற்கு உள்ளேயும் மோதல் ஏற்பட்டதால் திருச்சியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
இந்த தாக்குதல் குறித்து சிவாவின் ஆதரவாளர்கள் எம் பி திருச்சி சிவாக்கு தகவல் தெரிவித்தனர். எம்.பி சிவா மாநிலங்கள் அவை நடைபெற்று வருவதால் டெல்லியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் க. சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/