விழுப்புரம் மாவட்டம், இருவேல்பட்டு கிராமத்தில் அமைச்சர் பொன்முடி மீது பொதுமக்கள் சேற்றை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, முன்னறிவிப்பின்றி சாத்தனூர் அணையில் இருந்து திறந்த விடப்பட்ட 1.60 லட்சம் கன அடி தண்ணீரால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால், விழுப்புரம் மாவட்டம் இருவேல்பட்டு உள்ளிட்ட கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்தது.
இந்நிலையில், இருவேல்பட்டு கிராமத்தில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமைச்சர் பொன்முடி சென்றிருந்தார். அப்போது அவர் காரில் இருந்தபடியே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், "காரில் இருந்து இறங்க மாட்டீங்களா" எனக் கூறி அவர் மீது சேற்றை வீசியதாக கூறப்படுகிறது.
இதில், பொன்முடியின் மகன் கௌதம் சிகாமணி மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் மீதும் சேறு பட்டதாக தெரிகிறது. இதையடுத்து, அமைச்சர் பொன்முடி காரை விட்டு கீழே இறங்கி மக்களுக்கு தேவையானதை செய்து தருகிறோம் எனக் கூறி அங்கிருந்து திரும்பிச் சென்றார்.
இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. அமைச்சர் மீது சேறு வீசப்பட்ட சம்பவம் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“