சவுக்கு சங்கர் வீடு சூறை: இ.பி.எஸ், அண்ணாமலை, அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம்

சென்னையில், பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் தனது தாயாரையும் மிரட்டியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னையில், பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் தனது தாயாரையும் மிரட்டியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Annamalai EPS Savukku

சென்னையில் வசித்து வரும் அரசியல் விமர்சகரான சவுக்கு சங்கர் வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

சென்னை, கீழ்ப்பாக்கம் பகுதியில் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் வசித்து வருகிறார். யூடியூபில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக இவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நிலையில், இவருக்கு எதிராக சில வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதனால் சவுக்கு சங்கரை போலீசார் சிறையில் அடைத்தனர். இதைத் தொடர்ந்து, ஜாமின் பெற்று இவர் வெளியே வந்தார்.

எனினும், தொடர்ச்சியாக யூடியூபில் இவர் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், தூய்மைப் பணியாளர்கள் குறித்து அவதூறாக பேசியதாகக் கூறி இவர் வீட்டின் மீது இன்று (மார்ச் 24) காலை தாக்குதல் நடத்தப்பட்டது. இது குறித்த தகவலை சவுக்கு சங்கர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், "இன்று காலை 9.30 மணி முதல், துப்புறவு தொழிலாளிகள் என்று கூறிக் கொண்டு 50 பேர் கொண்ட கும்பல் நானும் என் தாயாரும் குடியிருக்கும் வீட்டின் மீது சராமரியாக தாக்குதல் நடத்தி வருகிறது. 

Advertisment
Advertisements

நான் வெளியே கிளம்பிய 5 நிமிடத்தில் வந்த இந்த கும்பல், வீட்டின் கதவை உடைத்து, உள்ளே நுழைந்து, படுக்கையறை, சமையலறை, சமையல் பொருட்கள் என அத்தனை பொருட்களின் மீதும் சாக்கடையையும், மலத்தையும் கொட்டினர். என்ன நடந்தது என்று என் தாயாருக்கு போன் செய்தபோது அந்த போனை வாங்கி வீடியோ காலில் வந்து கொலை மிரட்டல் விடுத்தனர்.  

 

 

காவல் கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக தகவல் தெரிவித்தேன். ஒரே ஒரு உதவி ஆய்வாளரும், ஒரு காவலரும் மட்டும் வந்தனர். 9.30 மணி முதல் இதுவரை போராட்டம் நடத்தியவர்கள், அந்த இடத்தை விட்டு அகலவில்லை. அந்த இடத்திற்கு சென்ற ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். யாருடைய தூண்டுதலில் இந்தத் தாக்குதல் நடைபெறுகிறது என்பதை சொல்ல வேண்டியதில்லை" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.   

 

 

இது தவிர, போராட்டக்காரர்கள் வீட்டின் கதவை உடைத்து அவரது வீட்டிற்குள் நுழைவதாக கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி என்று சிலவற்றை, தனது எக்ஸ் தள பக்கத்தில் சவுக்கு சங்கர் பதிவிட்டுள்ளார். இந்த சூழலில் தனது வீட்டில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து செய்தியாளர்களிடம் பல்வேறு தகவல்களை சவுக்கு சங்கர் பகிர்ந்து கொண்டார்.

அப்போது, "போராட்டக்காரர்கள் மினி பஸ்ஸில் வந்திருந்தனர். முதலில் என் வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, பாதுகாப்பாக இருக்குமாறு என் தாயாரிடம் தொலைபேசியில் அழைத்து கூறினேன். சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தேன். அதற்குள் வீட்டின் பின் கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். என் தாயாரின் செல்போனை பறித்து, அதில் வீடியோ கால் மூலம் எனக்கு மிரட்டல் விடுத்தனர்.

அதன் பின்னர், என் தாயார் பாதுகாப்பாக இருப்பதாகவும், செல்போனை வாங்கி மீண்டும் என் தாயாரிடம் ஒப்படைத்ததாகவும் போலீசார் என்னிடம் கூறினர். தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட வாகனத்தில் முறைகேடு நடந்திருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் அருண் ஆகியோர் மீது நான் குற்றச்சாட்டுகளை முன்வைத்தேன். இந்த தூண்டுதலின் பேரில் என் வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்டது" என்று அவர் குறிப்பிட்டார்.

மற்றொரு புறம், சவுக்கு சங்கர் வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தை கண்டிக்கும் விதமாக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்தனர்.

அண்ணாமலை கண்டனம்:

"தி.மு.க ஆட்சியின் ஊழலையும், சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற முடியாத கையாலாகாத்தனத்தையும் குறித்துப் பேசுபவர்கள் மீது, வழக்கு தொடர்வது, நள்ளிரவில் காவல்துறையினரை அனுப்பி மிரட்டுவது, குண்டாஸ் வழக்கில் கைது செய்வதென தொடர்ந்து அராஜகப் போக்கில் ஈடுபட்டு வருகிறது தி.மு.க அரசு. 

தி.மு.க அரசு ஊழல் செய்திருக்கிறது என்பதைக் கூறியதற்காக, திரு. சவுக்கு சங்கர் அவர்கள் மீது நடத்தப்படும் இந்த வன்முறையைக் கடுமையாகக் கண்டிக்கிறோம். ஒருவர் வீட்டினுள் அத்துமீறி நுழைந்து, சுமார் மூன்று மணி நேரம் கடந்தும், காவல்துறை இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், யாருடைய தூண்டுதலின் பெயரில் இது நடக்கிறது என்பதை உணர முடிகிறது.

 

 

ஆட்சியாளர்களின் இந்த அராஜகப் போக்கு தொடர்வது நல்லதல்ல. இதன் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்" என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி கண்டனம்:

"ஊடகவியலாளர் திரு. சவுக்கு சங்கர் வீட்டில் இன்று (24.3.2025) காலை, அவரது தாயார் தனியாக இருந்தபோது, 50 பேர் கொண்ட கும்பல் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து சில பொருட்களை எடுத்துச் சென்றதுடன், படுக்கையறை, சமையல் அறை, சமையல் பொருட்கள் என்று அனைத்துப் பொருட்களின் மீதும் சாக்கடையையும், மலத்தையும் கொட்டி உள்ளார்கள் என்ற செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற கீழ்த்தரமான செயல் மற்றும் தாக்குதல் கண்டனத்திற்குரியது.

ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள யாரும் இதை சகித்துக்கொள்ள மாட்டார்கள். உண்மையில் இந்தச் சம்பவம் கொடுமையின் உச்சம்; அராஜகத்தின் வெளிப்பாடு. சட்டத்தின் ஆட்சி நடக்கிறது என்று கூறிக்கொள்ளும் விடியா தி.மு.க-வின் ஸ்டாலின் மாடல் ஆட்சியில் இப்படிப்பட்ட சம்பவம் நடந்தேறியது. மனசாட்சியுள்ள அனைவரும் தலைகுனிந்து வெட்கப்பட வேண்டிய ஒரு சம்பவமாகும். 

 

 

இந்தக் கொடுமையான செயலை செய்த கும்பலையும், பின்னணியில் உள்ள அனைவரையும் சட்டத்தின் முன்பு நிறுத்தி கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். சட்டப்படி நடவடிக்கை எடுக்க தவறும்பட்சத்தில், அ.தி.மு.க பதவியேற்றவுடன், தூய்மைப் பணியாளர்கள் போர்வையில் இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள், பின்னணியில் உள்ளவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுத்து தண்டிக்கப்படுவார்கள் என்று எச்சரிக்கிறேன்" என்று எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

கார்த்தி சிதம்பரம் கண்டனம்:

"இந்த கடுமையான தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது. இக்குற்றத்தில் ஈடுபட்டவர்களை, உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். இல்லையென்றால் இது மக்களின் நம்பிக்கையை மேலும் சிதைக்கும்" என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

 

 

அரசியல் செயற்பாட்டாளர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் கண்டனம்:

 

 

"சவுக்கு சங்கர் வீட்டுக்குள் புகுந்து அவரின் அம்மாவின் செல்ஃபோனை பிடுங்கி அந்த போனிலேயே சவுக்கு சங்கரை மிரட்டுகிறார்கள். அங்கே கழிவுகளை கொட்டி இருக்கிறார்கள்.  கடந்த 2020வரை பேசித் தீர்த்த பல திடீர் முற்போக்காளர்கள் synthetic people இப்போது எல்லாம் வாயைத் திறக்க வில்லை. சென்னி மலை முகிலன் காணாமல் போனபோது இவர்கள் போட்ட கூப்பாடு….. அன்று இருந்த கோவனை போன்ற நடிப்பு போராளி போலிகள் எங்கே!? முற்போக்காளர்கள், ஊடகங்கள் வாயே திறக்கவில்லை, கேவலமானது" என்று அரசியல் செயற்பாட்டாளர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகவியலாளர் சுமந்த் ராமன் கண்டனம்:

 

 

"சவுக்கு சங்கர் வீட்டை தாக்கியதும், அவரது வயதான தாயை மிரட்டியதும் கண்டிக்கத்தக்கது. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகள் தங்களுடைய அடையாளத்தை மறைக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதனால் அவர்கள் மீது போலீசார் விரைவாக நடவடிக்கை எடுக்க முடியும்" என ஊடகவியலாளர் சுமந்த் ராமன் தெரிவித்துள்ளார். 

நாராயணன் திருப்பதி கண்டனம்:

 

 

இன்று சவுக்கு சங்கர் அவர்களின் இல்லத்தின் மீதும் அவரின் தாயாரின் மீதும் நடந்த தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஒரு வீட்டில் ஒரு முதிய பெண்மணியின் மீது அப்பட்டமான இந்த தாக்குதல் காவல்துறையின் மெத்தனத்தை, திராவிட மாடல் தி.மு.க அரசின் ஃபாஸிஸ போக்கை, சர்வாதிகாரத்தை உணர்த்துகிறது. இந்த தாக்குதலுக்கு பின்னணியில் உள்ளவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டிய பொறுப்பும் கடமையும் காவல் துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சருக்கு உள்ளது. சவுக்கு சங்கர் மற்றும் அவரது குடும்பத்தினரின் உயிருக்கு பொறுப்பேற்க வேண்டியது தமிழக அரசே!

திருமாவளவன் கண்டனம்:

 

 

சவுக்கு சங்கரின் இல்லத்தில் நுழைந்து அவரது தாயாரை அச்சுறுத்தியதுடன், ஆங்கே மனிதக் கழிவு உள்ளிட்ட சாக்கடை கழிவுகளைக் கொட்டியுள்ள குரூரச் செயல் மிகுந்த  அதிர்ச்சியளிக்கிறது. தூய்மைப் பணியாளர்களைச் சவுக்கு சங்கர் இழிவுப்படுத்திப் பேசியதால்தான், அதன் எதிர்வினையாக இது நடந்திருக்கலாமென சொல்லப்படுகிறது.  எனினும், இது அநாகரித்தின் உச்சம். அருவருப்பான இந்த நடவடிக்கைகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. தி.மு.க அரசின் மீது களங்கத்தை ஏற்படுத்துவதாகவே இந்த இழிசெயல் அமைந்துள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு 
இதில் தொடர்புடையவர்கள் அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

சசிகாந்த் செந்தில் கண்டனம்:

சவுக்கு சங்கர் இல்லத்தின் மீதான தாக்குதலை நான் சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கிறேன். வன்முறைக்கு இலக்காக யார் இருந்தாலும் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது. ஜனநாயகத்தில் அதற்கு இடமில்லை. 

சவுக்கு சங்கரின் கருத்துகளோடு நான் ஒத்துப் போகவில்லை. அவருடன் எந்த தொடர்பும் எனக்கு இல்லை என்பதை மீண்டும் வலியுறுத்திக் கொள்கிறேன். எங்கள் கருத்தியல் நிலைப்பாடுகள் அடிப்படையில் வேறுபட்டவை. அவருடைய கருத்துக்கள் அல்லது அறிக்கைகளுடன் நான் உடன்படவில்லை.

 

 

இருப்பினும், இதுபோன்ற தாக்குதல்கள் குறித்து அமைதியாக இருப்பது நியாயமற்றது மற்றும் பொறுப்பற்றதாக இருக்கும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்து அனைத்து குடிமக்களின் பாதுகாப்பையும் பாதுகாப்பையும் நிலைநிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Savukku Shankar

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: