தமிழ்நாட்டில் பேருந்து கட்டணம், மின் கட்டணம், சமையல் எரிவாயு கட்டணம் எல்லாம் உயர்த்தப்பட்டாலும், ஆட்டோ கட்டணம் பல ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை. எரிபொருள் விலை பல மடங்கு உயர்ந்த போதும் ஆட்டோ கட்டணத்தை உயர்த்தி அரசு அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. தொடர்ந்து இது தொடர்பாக அரசுக்கு கோரிக்கை வைத்தும் அரசு நடவடிக்கை எடுக்க மறுப்பதாக ஆட்டோ ஓட்டுநர்கள் புகார் கூறுகின்றனர்.
அதே போல, பைக் டாக்ஸிகளின் வருகையால் ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக்கியுள்ளதாக ஆட்டோ ஓட்டுநர்கள் கூறுகின்றனர். அதனால், பைக் டாக்ஸிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் கோரி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு, ஆட்டோ கட்டணத்தை உயர்த்தாத நிலையில் சில ஆட்டோ சங்கங்கள் பிப்ரவரி 1-ம் தேதி முதல் ஆட்டோ கட்டணத்தை உயர்த்த உள்ளதாக அறிவித்து சில ஆட்டோக்களில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
ஆட்டோ கட்டணம் முதல் 1.8 கிலோ மீட்டர் தொலைவுக்கு குறைந்த பட்சம் 50 ரூபாய் என்றும் அதைத் தொடர்ந்து ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 18 ரூபாயும், காத்திருப்புக்கு ஒவ்வொரு நிமிடத்துக்கும் ரூ1.50ம் பிப்ரவரி 1-ம் தேதி முதல் கட்டணமாக வசூலிக்கப்படும் என்றும் ஆட்டோ ஓட்டுநர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இந்நிலையில், ஆட்டோ கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான முடிவுகள் அரசின் பரிசீலனையில் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆட்டோ சங்கங்கள் தன்னிச்சையாக கட்டணத்தை உயர்த்த முடியாது. சில ஆட்டோ சங்கங்கள் வரும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் கட்டணத்தை உயர்த்த உள்ளதாக போக்குவரத்து துறை கவனத்திற்கு வந்ததுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், ஏற்கனவே நிர்ணயம் செய்யப்பட்டுள்ள கட்டணத்தை மீறி கூடுதல் கட்டணம் வசூலித்தால் வட்டார போக்குவரத்து அலுலவர்களிடம் புகார் அளிக்கலாம் என்றும் தமிழ்நாடு போக்குவரத்து துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.