ஆவடி அருகே பட்டாபிராமில் ரூ.235 கோடி மதிப்பில் டைடல் தகவல் தொழில்நுட்ப பூங்காவை அமைக்கும் திட்டத்திற்கு முதல்வர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டி திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.
சென்னை ஆவடி அருகே பட்டாபிராமில் ரூ.235 கோடி மதிப்பில் டைடல் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கும் திட்டத்திற்கு முதலவர் பழனிசாமி திங்கள்கிழமை காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். மாநில தொழில்துறை சார்பில் கட்டப்பட உள்ள இந்த ஐடி பூங்கா பட்டாபிராமில் 10 ஏக்கரில் 5.57 லட்சம் சதுர அடி பரப்பளவில் 21 மாடி கட்டிடம் கட்டப்பட உள்ளது. இந்த கட்டிடத்தில் அலுவலகங்கள், தொழில்துறை மையங்கள், பொது உள்கட்டமைப்பு மற்றும் ஒரு தொங்கும் தோட்டம் ஆகியவை இருக்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய ஐடி பூங்காவின் கட்டுமானப் பணிகள் 2 ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஐடி பார்க் மூலம் சுமார் 25,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென் சென்னையில் தரமணியில் உள்ள டைடல் பூங்காவைப் போலவே வட சென்னையும் வளர்ச்சி அடைய வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் பழனிசாமி ஐடி பார்க் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியபோது, இந்த நிகழ்ச்சியில் மாநில தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்துகொண்டு மாநில பேரிடர் மீட்பு நடவடிக்கை பணி நிதியாக ரூ.50 லட்சம் வழங்கினார். அப்போது அவருடன் ஆவடி எம்.எல்.ஏ-வும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சருமான மாஃபாய் பாண்டியராஜன் உடன் இருந்தார்.
ஆவடி ஐடி பார்க் திட்டத்தை தொடர்ந்து முதல்வர் பழனிசாமி பல்வேறு மாவட்டங்களில் துணை மின் நிலையங்களைத் திறந்து வைத்தார்.
நாமக்கல், திருப்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகப்பட்டினம், கோயம்புத்தூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் ரூ.224 கோடி செலவில் கட்டப்பட்ட 15 புதிய துணை மின் நிலையங்களை முதல்வர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அப்போது மாநில மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி, சமூக நலத்துறை அமைச்சர் வி.சரோஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பையனூரில் தென்னிந்திய திரைப்பட ஊழியர் சம்மேளனம் (FEFSI) மூலம் முதல் கட்டமாக சினிமா தொழிலாளர்களுக்கான 1,000 வீட்டுவசதி குடியிருப்புகளை அமைப்பதற்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். அப்போது ஜெயலலிதா பெயரில் திரைப்பட நகரம் அமைப்பதற்கு முதல்வ பழனிசாமி ஃபெஃப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணியிடம் ரூ.50 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.