சோழவரம் அருகே போக்குவரத்து நெரிசலில் நின்று கொண்டிருந்த ஆவடி காவல் ஆணையர் காரின் மீது பின்னால் நின்ற லாரி மோதியது. இந்த விபத்தில் கார் பலத்த சேதம் அடைந்த நிலையில், காவல் ஆணையர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியில் வரும் 19 ஆம் தேதி முதல்வர் மு.க ஸ்டாலின் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆவடி காவல் ஆணையர் சங்கர் தினம் தோறும் ஆய்வு செய்து வருகிறார்.
அந்த வகையில் இன்றும் முதல்வரின் நிகழ்ச்சிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துவிட்டு தனது காரில் சோழவரம் வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது ஜி.என்.டி சாலையில் செம்புலிவரம் சந்திப்பில் வாகனங்கள் சாலையை கடக்க நின்று கொண்டிருந்தன. அந்த வகையில், ஆவடி காவல் ஆணையரின் வாகனமும் நின்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக பின்னால் வந்த லாரியின் டயர் ஒன்று வெடித்து கட்டுப்பாட்டை இழந்து, தாறுமாறாக ஓடி முன்னால் நின்று கொண்டிருந்த சரக்கு வாகனம் மீது மோதியது. பின்னர் வாகனங்கள் அடுத்தடுத்து மோதியதில் மற்றொரு வாகனம் ஆவடி மாநகர காவல் ஆணையரின் கார் மீது பயங்கரமாக மோதியது.
இதில் காவல் ஆணையர் பயணித்த கார் நொறுங்கியது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக ஆவடி மாநகர காவல் ஆணையர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். காவல் ஆணையரின் பாதுகாவலர் மாரி செல்வத்திற்கு கையில் காயம் ஏற்பட்டது. அவரை மீட்ட போக்குவரத்து காவல்துறையினர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். விபத்தில் சிக்கியதில் ஆவடி காவல் ஆணையரின் காரின் பக்கவாட்டு பகுதியில் பலத்த சேதம் அடைந்தது.
இந்த விபத்தை அடுத்து அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அங்கு வந்த காவலர்கள் போக்குவரத்தை சரி செய்தனர். சென்னை அருகே வாகன விபத்தில் காவல் உயர் அதிகாரியான ஆவடி காவல் ஆணையரின் கார் சிக்கிக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து தொடர்பாக செங்குன்றம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.