கோவையில் திடீர் மழை காரணமாக சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீர்
கோவையில் ஓரு மணி நேரம் பெய்த கனமழை காரணமாக அவினாசி சாலை, லங்கா கார்னர் சுரங்க சலைகள் மீண்டும் நீரில் மூழ்கின. இதனால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
Advertisment
கோவையில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று திடீரென மாலை நேரத்தில் சுமார் ஒரு மணிநேரம் பலத்த இடியுடன் கனமழை பெய்தது.
இதனால் மீண்டும் அவினாசி சாலை, லங்கா கார்னர், கிக்கானிக் பள்ளி சுரங்க பாதைகள் நீரில் மூழ்கின. அங்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இரும்பு பேரிகார்டுகள் போடப்பட்டன. இதனால் சுரங்கு பாதையில் செல்லும் வாகனங்களும் மேம்பாலத்திற்கு திருப்பி விடப்பட்டதால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அவினாசி சாலையில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணி வகுத்து நின்றன.
இதே போல் லங்கா கார்னர் சுரங்க பாதையில் மழை நீர் சூழ்ந்ததால் திருச்சி சாலைக்குச் செல்லும் வாகனங்களும் செல்ல முடியவல்லை.இதனால், பள்ளி முடிந்து பேருந்து காத்திருந்த மாணவ- மாணவிகள் தண்ணீரிலேயே அடுத்த பேருந்து நிறுத்தம் வரை நடந்து சென்றனர்.
மழை காரணமாக காத்திருந்த மாணவ-மாணவியர்
மேலும் அரசு மருத்துவமனை வளாகத்தின் பழைய நுழைவு வாயிலில் தண்ணீர் சூழ்ந்தது. இதனிடையே சுரங்க பாதைகளில் உள்ள நீரை இராட்சத மோட்டார்கள் மூலம் அகற்றினர். முக்கிய சாலைகளில் போலீசார் போக்குவரத்து நெரிசலை சீர்செய்தனர்.
இதேபோல், தடாகம் சாலை மாங்கரை பகுதியில் தைல மரம் பேருந்து நிறுத்தம் அருகில் புதிதாக கட்டப்பட்டு வரும் தரைப்பாலமானது மழை நீரால் முழுவதுமாக சேதம் அடைந்தது.
அதன் ஒரு பகுதி முழுவதுமாக மழையில் அடித்து செல்லப்பட்டு மழை நீர் தேங்கியதால் எதிரெதிர் புறங்களில் வந்த வாகனங்கள் அதனை கடக்க முடியாமல் நின்றன. பின்னர் ஜேசிபி இயந்திரம் வரவழைக்கப்பட்டு மழை நீர் தேங்கி நின்ற இடத்தில் மண்ணை கொண்டு நிரப்பிய பின்பு போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“