தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியதால், தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் என சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்த அவர், " சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிப்புரம், திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகளவில் உள்ளது. இந்த மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என சுகாதாரத் துறை நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே, மக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
கொரோனா பாதிப்புக்குளான நபரை உடனடியாக கண்டறியவில்லை என்றால், அது தொற்று பரவலை அதிகரிக்கும். அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் கொரோனா பாதிப்பை கண்டறியும் பணியும் துரிதப்படுத்த வேண்டும். எவ்வித பயண வரலாறு இல்லாத சிலருக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருப்பதை கண்டறிந்துள்ளோம். மாஸ்க் அணிவது, பொது கூட்டம் செல்வதை தவிர்ப்பது போன்ற நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்" என்றார்.
மேலும் பேசிய அவர், " கோடம்பாக்கம், அடையார்,தேனாம்பேட்டை, ராயபுரம் ஆகிய பகுதிகளில் கொரோனா பாதிப்புகள் அதிகம் உள்ளது. பாதிப்பை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துவருகிறோம். தமிழ்நாட்டில் மொத்தம் 141 பேருக்கு எஸ்-ஜீன் வகை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 46 பேர் ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 17 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது, பள்ளி, கல்லூரிகள், மார்கெட், மருத்துவமனைகளில் கண்காணிப்பை அதிகப்படுத்தியுள்ளோம்" என்றார்.
சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறுகையில், " காய்ச்சல், தொண்டை வலி போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாநகராட்சி தயார் நிலையில் வைத்துள்ளது.
மாணவர்கள் (விடுதிகளில் உள்ளவர்கள் உட்பட) உணவு உண்பதற்காக மெஸ்/ கேன்டீன்கள் போன்ற இடங்களில் ஒரே நேரத்தில் வராமல் இருப்பதை பள்ளி, கல்லூரி நிர்வாகம் உறுதி செய்வதை அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த இடங்களில் அதிகாரிகள் மூலம் ரேண்டமாக மாதிரி சோதனை செய்யப்படும்" என தெரிவித்தார்.
நேற்று, தமிழ்நாட்டில் 739 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. 8 பேர் உயிரிழந்தனர். மாநிலத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 46 ஆயிரமாக உள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 36 ஆயிரத்து 758 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் 294 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கிடையில், சென்னையில் கடந்த 2 வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரிப்பதை சுட்டிக்காட்டி, கட்டுப்பாடுகளை கடுமையாக்குமாறு ராதாகிருஷ்ணனுக்கு மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷன் கடிதம் அனுப்பியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil