தேனி மாவட்டத்தில் அரசு நிலத்திலிருந்து 500 கோடி ரூபாய் மதிப்பிற்கு அனுமதியின்றி கிராவல் மண் எடுத்ததாக முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீதான புகார் குறித்து விசாரணை நடத்த ஆணையரின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு இயக்குனரகம் (டிவிஏசி) சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
உப்பார்பட்டியை சேர்ந்த ஞானராஜன், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "வட வீரநாயக்கன்பட்டி கிராமத்தில், அரசு நிலங்களிலிருந்து, அனுமதியின்றி, 500 கோடி ரூபாய் மதிப்பிலான கிராவல் மணலை உதவியாளர்கள் மூலமாக முன்னாள் துணை முதல்வர் பன்னீர்செல்வம் எடுத்துள்ளார்.
பன்னீர்செல்வத்தின் உதவியாளர் வி.அன்னப்பிரகாசமும், அவரது குடும்ப உறுப்பினர்களும் இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர். அரசு நிலங்களிலிருந்து மணல் எடுத்த பிறகு, அந்த நிலங்கள் தனியார் சொத்துகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக 17 பக்க ஆதாரங்களுடன் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு உத்தரவிடக்கோரி புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது, புகாரின் விவரங்கள் 217 பக்கங்களாக உள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி பாரதிதாசன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வைக்கப்பட்ட வாதத்தில் 217 பக்க ஆதாரங்களுடன் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. உடனடியாக ஆரம்பகட்ட விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.
ஏதேனும் தவறு கண்டறியும் பட்சத்தில், புகாரின் அடிப்படையில் குற்றவாளிகளுக்கு எதிராக DVAC வழக்குப்பதிவு செய்ய வேண்டும், " என கோரிக்கை வைக்கப்பட்டது.
தொடர்ந்து, டிவிஏசி சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் சிஇ பிரதாப், "இவ்விவகாரத்தில் மனுதாரரின் புகார் விஜிலென்ஸ் கமிஷனரிடம் நிலுவையில் உள்ளதாகவும், அவரது ஒப்புதலின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி, விஜிலென்ஸ் கமிஷனரின் ஒப்புதலை பெற்று மேல் நடவடிக்கை எடுப்பது குறித்து தெரிவிப்பதற்காக வழக்கு விசாரணையை 2 மாதங்களுக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil