அயனாவரம் சிறுமி கூட்டு பலாத்கார வழக்கு: வழக்கறிஞர்கள் ஆஜராகமாட்டோம் என உறுதி!

கைதான 17 பேர் சார்பாக எந்த வழக்கறிஞரும் ஆஜராக மாட்டார்கள்

அயனாவரம் சிறுமியை 17 பேர் கொண்ட கும்பல் கூட்டு பலாத்காரம் செய்த வழக்கில், கைதான  தரப்பில் வாதாட வழக்கறிஞர்கள் ஆஜராக மாட்டார்கள் என சென்னை உயர்நீதிமன்ற  வழக்கறிஞர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

சென்னையில் 12 வயது சிறுமிக்கு 17 பேர் கொண்ட கும்பல் போதை ஊசி ஏற்றியும், கத்தியை காட்டி மிரட்டியும் கடந்த 7 மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர். சிறுமியின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, 17 பேரை பிடித்து சென்னை அயனாவரம் மகளிர் காவல்நிலையத்தில் வைத்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் அயனாவரம் மகளிர் காவல் நிலையத்தில் கூறியிருப்பது, மன வளர்ச்சியற்ற அந்த சிறுமியால் தனக்கு நேர்ந்ததை விளக்க முடியவில்லை என்றும், உடல்நலக்குறைவு ஏற்பட்ட போது செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனையின் மூலமே இந்த துயரம் தெரியவந்ததாகவும் கூறி இருந்தார்.

இதைத் தொடர்ந்து, போலீசார் 17 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து, சென்னை மகளிர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தினர். குற்றம்சாட்டப்பட்ட 17 பேரையும் வரும் 31-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

நீதிமன்ற வளாகத்தில் இருந்து அவர்கள் 17 பேரையும் போலீசார் அழைத்து வரும் போது, ஆத்திரமடைந்த பல வழக்கறிஞர்கள் அவர்களை கடுமையாக தாக்கினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே, கைதான 17 பேர் சார்பாக எந்த வழக்கறிஞரும் ஆஜராக மாட்டார்கள் என சென்னை உயர்நீதிமன்ற  வழக்கறிஞர்கள் சங்கம் அறிவித்துள்ளது. ஒருவேளை வழக்கறிஞர்கள் யாரேனும் ஆஜரானால், அவர்கள் சங்கத்தில் இருந்து நீக்கப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close