அயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை: பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து
Edappadi Palanichami : அயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை சிறப்பாக நடைபெறுவதற்கு எனது சார்பாகவும், தமிழ்நாட்டு மக்களின் சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்ற இந்து மக்களின் கனவை நனவாக்கும் வகையில் ராமர் கோயில் பூமி பூஜை விழாவில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்ட உள்ள பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Advertisment
இதுகுறித்து முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு நடைபெற உள்ள பூமி பூஜை சிறப்பாக நடைபெறுவதற்கு எனது சார்பாகவும், தமிழ்நாட்டு மக்களின் சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
1992 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் தேதியன்று நடைபெற்ற தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, "அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும்", என்று வலியுறுத்திப் பேசினார். அதே சமயம், மசூதியும் அயோத்தியில் இருக்க வேண்டும் என விரும்பினார். இதன் மூலம், தேசிய ஒற்றுமைக்காகவும், நாட்டின் நன்மைக்காகவும், இந்துக்கள் மற்றும் இஸ்லாமிய மக்களிடையே ஒற்றுமையை அவர் விரும்பினார் என்பது தெளிவாகிறது.
உச்ச நீதிமன்றம் வழங்கிய, அனைத்துத் தரப்பு மக்களும் வரவேற்கத்தக்க, ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பின்படி அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான சுமுகமான சூழல் ஏற்பட்டுள்ளதையடுத்து, மத்திய அரசு, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டமைக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்ற இந்து மக்களின் கனவை நனவாக்கும் வகையில், ராமர் கோயில் பூமி பூஜை விழாவில் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டவுள்ள பிரதமருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்''. இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil