ஆயுதபூஜை நாளில் வீடுகள், தொழிற் சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் பட்டறைகள் என அனைத்து இடங்களிலும் பூஜை செய்வது வழக்கம். மேலும் வீடுகளிலும் பூஜை செய்து, கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களுக்கு திருஷ்டி சுற்றி பூசணி உடைப்பதை பொதுமக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து திருச்சி காந்தி மார்க்கெட்டில், திருச்சி மட்டுமல்லாமல் அரியலூர், பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை போன்ற சுற்றியுள்ள பல மாவட்டங்களில் இருந்து ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை பண்டிகையை கொண்டாட காய்கறிகள், பூக்கள், வாழை கன்று, பழங்கள் போன்ற பொருட்களை வாங்குவதற்காக மொத்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வருகை தருவார்கள். அந்த வகையில் திருச்சி காந்தி மார்க்கெட்டில் இன்று காலை முதலே மக்கள் கூட்டம் அலை மோதி வருகிறது.
ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை இன்று மற்றும் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக மொத்த வியாபாரிகளும், பொதுமக்களும் காந்தி மார்க்கெட்டில் கூடியதால் காந்தி மார்கெட் பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்படுகிறது. இந்தாண்டு பூஜைபொருட்களின் விலை வழக்கத்தைவிட உயர்ந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர். மேலும் ஆயுதபூஜையை முன்னிட்டு பழங்களின் விலைகளும் உயர்ந்துள்ளது.
வாழைத்தார் பூவன் ரூ.650, செவ்வாழை ரூ.900, கற்பூரவள்ளி ரூ.650, ரஸ்தாலி ரூ.500, ஆப்பிள் ரூ.160-க்கும், ஆரஞ்சு ரூ.80-க்கும், மாதுளை ரூ.150-க்கும், சாத்துக்குடி ரூ.60-க்கும், கொய்யா ரூ.120-க்கும் விற்பனையானது. வாழைக்கன்று ஜோடி ரூ.40-க்கும், மாவிலை தோரணம் இரண்டு ரூ.20-க்கும், வெள்ளை பூசணி ரூ.30 முதல் ரூ.50 வரையும் விற்கப்படுகிறது. பொரி கிலோ ரூ.100-க்கும், பொட்டுக்கடலை ரூ.100 முதல் ரூ.120-க்கும், நிலக்கடலை ரூ.160 முதல் ரூ.180-க்கும், அவல்ரூ.80 முதல் ரூ.100-க்கும் விற்கப்படுகிறது.
கருப்பு சுண்டல் கிலோ ரூ.90-க்கும் கொண்டை கடலை ரூ.190-க்கும், மண்டை வெல்லம் ரூ.60-க்கும், அச்சுவெல்லம் ரூ.60க்கும் விற்கப்படுகிறது. பொருட்கள், பழங்களின் விலை உயர்வால் மக்கள் தவிக்கின்றனர். ஆயுதப் பூஜைக்காக மார்க்கெட்டுக்கு பழங்கள் மற்றும் பூஜை பொருட்கள் வாங்க வந்தவர்கள், விலை தாறுமாறாக உள்ளதால் சாமானிய மக்கள் எப்படி வாங்க முடியும் எனப் புலம்பினர். ஒரு சிலர் வாங்க வந்த பொருட்களின் அளவினை குறைத்துக் கொண்டு வாங்கிச் சென்றதையும் காண முடிந்தது.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“