தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் பி.அய்யாக்கண்ணு தலைமையில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசல் முன்பு தலையில் முக்காடு போட்டு போராட்டம் நடத்தினர்.
Advertisment
இதனால் ஆட்சியர் அலுவலகம் செல்ல முடியாமல் பலரும் அவதிப்பட்டனர். இந்தப் போராட்டம் குறித்து அய்யாக்கண்ணு தெரிவிக்கையில்; விவசாயிகள் என்றால் நிலம் வைத்திருப்பவர்களும், குத்தகைக்கு நிலம் உழவு செய்யும் விவசாயிகளும், விவசாய நிலத்தில் கூலி வேலை செய்பவர்களும், அடமானம் வாங்கி விவசாயம் செய்யும் விவசாயிகளும் விவசாயிகள் ஆவார்கள்.
ஆனால், மத்திய அரசு யார் பெயரில் நிலம் உள்ளதோ அவர்கள் மட்டும் உண்மையான விவசாயிகள், மற்றவர்கள் உண்மையான விவசாயிகள் அல்ல, பட்டா நிலம் உள்ள விவசாயிகளுக்கு மட்டும் வருடம் ரூ.6000/-(மாதம் 500 வீதம் - PM கிஷான் சம்மன் நிதி) பென்சன் வழங்கப்படும் என்று அறிக்கை வெளியிட்டு உள்ளது.
இது கண்டிக்கத்தக்கது. குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே ரூ.6000/- வழங்கப்படும் என்றால், அரசு வேலையிலிருந்து ஓய்வு பெற்ற ஒரே குடும்பத்தை சார்ந்த 10 பேர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.20,000/-த்திற்கும் மேல் வழங்கும் மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்கு மாதம் ரூ.500/-கூட பென்சன் வழங்க மறுப்பது நியாயமா.?
Advertisment
Advertisements
விவசாயிகள் என்ன இந்த நாட்டின் அடிமைகளா.? இந்திய ஜனத்தொகை 140 கோடிக்கு மேல் இருக்கும் நிலையில், இந்து விவசாயிகள் 90 கோடிக்கும் மேல் இருக்கின்றனர். இவர்களை மத்திய அரசு காப்பாற்ற வேண்டாமா?
அய்யாக்கண்ணு தலைமையில் போராட்டம்
வாழை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு கடன் வழங்க மறுப்பத்துடன், கடன் வழங்கிய பிறகு சூறாவளி காற்றால் வாழை ஓடிந்துவிடக் கூடாது என்பதற்காக 1000 சவுக்கு வாங்குவதற்கு ரூ.13,500/- கொடுப்பது எப்படி சாத்தியப்படும், இது நியாயமா.?
எதுமலை கூட்டுறவு சங்க செயலாளர் வாழை மரத்தை காப்பாற்ற வாழை விவசாயிகளுக்கு சவுக்கு லோன் தர மறுபத்துடன் கடன் கொடுப்பது நான், நான் யாருக்கு வேண்டுமானாலும், எப்போ நினைக்கின்றேனோ அப்போது கடன் கொடுப்பேன் இல்லையென்றால் இல்லை என்று செயலாளர் கூறுவது நியாயமா.? இந்தக் கூட்டுறவு சங்க செயலாளர் கொடுக்கும் பணம் அவருடைய குடும்ப பணமா அல்லது அவரது அப்பாவின் பணமா.? இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்கு இலாபகரமான விலை கொடுக்காமல் மத்திய அரசு ஏமாற்றி மோசடி செய்தது ரூ.400 இலட்சம் கோடிகள, அந்த பணம் தான் வங்கியிலும், கூட்டுறவு சங்கங்களிலும் உள்ளது?
அதை கடனாக விவசாயிகளுக்கு கொடுக்க மறுக்கும் அதிகாரிகளை கண்டிப்பது அரசின் கடமை இல்லையா.? கோவில் நிலங்களை தலைமுறை தலைமுறையாக விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு ரூ.6000/- பென்சன் கிடையாது என்பதும், 60 அல்லது 70 ஆண்டுகளுக்கும் மேல் சாகுபடி செய்யும் கோவில் நிலங்களை மற்றவர்களுக்கு ஏலம் விடுவதை கண்டித்தும், கோவில் நிலங்களை சாகுபடி செய்பவர்களுக்கு கூட்டுறவு சங்கங்களில் விவசாய கடன் வழங்க மறுப்பது நியாயமா.?
60 ஆண்டுகளாக நரிக்குறவர்கள் உழுது விவசாய நிலத்திற்கு பட்டா கொடுக்காமல் கைது வழக்கு போடுவது நியாயமா.? இதையெல்லாம் கேட்டு போராட்டம் செய்தால் எங்களின் மீது காவல்துறை வழக்கு போடுவதும், கைது செய்வதும் நியாயமா? எனக் கேட்டவாறு இன்று காலை 10.30 மணி முதல் தலையில் பச்சை துண்டை முக்காடாக போர்த்தி 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் பி.அய்யாக்கண்ணு தலைமையில் போராட்டம் நடத்தினர்.
அய்யாக்கண்ணுவின் இந்த போராட்டத்தால் காலை முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அய்யாக்கண்ணு போராட்டம் என்றாலே போலீஸார் ரொம்ப அலார்ட்டாகிவிடுவர். எப்ப எத செய்வார், எப்படி செய்வார் எனத் தெரியாது என்பதால் கூடுதல் போலீஸார் அங்கே குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil