டெல்டாவுக்கென அமைச்சர் யாரும் இல்லாதது விவசாயிகளுக்கு பெரும் இழப்பாக உள்ளது. விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேறாவிடில் சென்னையில் திரள்வோம் என்று விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் நாகை கடலோரப் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி சிதைந்து போனது. மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் வயல்வெளிகள் ஏரிகளாக காட்சியளித்தன. மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தங்கள் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அமைச்சர்களாக இல்லையே என்ற குறை இப்போதுதான் மக்களுக்குத் தெரிய ஆரம்பித்திருக்கிறது. பொறுப்பு அமைச்சர்களில் ஒருவரான மகேஷ் பொய்யாமொழி அரசுமுறை வெளிநாட்டுப் பயணத்தில் இருக்கிறார். இன்னொருவரான மெய்யநாதன் முழுப்பொறுப்பெடுத்து வெள்ள நிவாரணப் பணிகளைக் கவனித்து வருகிறார். ஆனாலும், அமைச்சர்கள் எங்கள் மாவட்டத்தினராக இருந்தால் அவர்களுக்கு அனைத்துப் பகுதிகளையும் நன்றாகத் தெரியும், மீட்புப் பணிகளைக் முடுக்கிவிடுவதும் எளிதாக இருக்கும். விவசாயிகள் தங்களது பிரச்சினைகளை உரிமையோடு எடுத்துச் சொல்லவும் வசதியாக இருக்குமே” என ஆதங்கப்படுகிறார்கள் டெல்டாவாசிகள்.
சில மாவட்டங்களுக்கு இரண்டு அமைச்சர்கள் கூட இருக்கிறார்கள். ஆனால், மழை, வெள்ளம் உள்ளிட்ட பேரிடர்களால் பாதிக்கப்படும் டெல்டா மாவட்டங்களுக்கு தற்போது ஒரு அமைச்சர்கூட இல்லை. அமைச்சர்கள் மெய்யநாதனும், மகேஷ் பொய்யாமொழியும் டெல்டா மாவட்டங்களுக்கான பொறுப்பு அமைச்சர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், ‘சன் ஆஃப் சாயில்’ இல்லை என்பதால் அவர்களால் டெல்டா விவசாய மக்களோடு அவ்வளவாக ஒன்றமுடியவில்லை என ஆதங்கப்படுகின்றனர்.
இந்த நிலையில், இன்று (நவம்பர் 20) மயிலாடுதுறை, சீர்காழி, பல்லவராயன்பேட்டை, ஆனந்தகுடி, அருண்மொழித்தேவன் பகுதிகளில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகளை தென்னிந்திய தேசிய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு இன்று பார்வையிட்டார்.
பின்னர் அய்யாக்கண்ணு தெரிவித்ததாவது: அமைச்சர் இல்லாத மாவட்டமாக உள்ளதால் மயிலாடுதுறை மாவட்டத்துக்கு குறைந்த நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தை மழையால் பாதித்த மாவட்டமாக அறிவித்து அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும், அமைச்சர்கள் உள்ள மாவட்டங்களில் 50 கோடி, 60 கோடி என காப்பீட்டுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் அமைச்சர் இல்லாத மாவட்டமாக உள்ளதால் குறைந்த நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது, மாவட்ட ஆட்சியர் பாதிக்கப்பட்ட விவசாயிகளை அழைத்துப் பேச வேண்டும்.
விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்துவோம். அதற்கும் உடன்படவில்லை என்றால் சென்னையை முற்றுகையிடுவோம். முறையாக கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் ஏக்கருக்கு ரூபாய் 30,000 நிவாரணமாக வழங்க வேண்டும். தேர்தல் வந்தால் நாட்டின் முதுகெலும்பாக நினைக்கும் அரசுகள் தேர்தலுக்குப்பின் விவசாயிகளை அடிமைகளாக கருதுவது வேதனை அளிக்கிறது என்றார்.
இந்த ஆய்வின்போது, சங்கத்தின் மாவட்ட தலைவர் அ.ராமலிங்கம், மாநில செயலாளர் மகேந்திரன், மற்றும் நிர்வாகிகள் டி.ஆர் முருகேசன், கே.கே.ஆர் செந்தில்குமார், க பாலகிருஷ்ணன், ரா.பாலகுரு, ஆர்.சசிகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தி: க.சண்முகவடிவேல் - திருச்சி
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.