மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்னையில் செப்.5ம் தேதி நடக்கவுள்ள அமைதிப் பேரணி குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அழகிரி, 'நான் கருணாநிதியின் மகன், சொன்னதைச் செய்வேன்' என்று கூறியுள்ளார்.
மு.க.ஸ்டாலின் – மு.க.அழகிரி முட்டல் மோதல் சங்கதி அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. வரும், 5-ம் தேதி சென்னையில் உள்ள கருணாநிதி நினைவிடத்துக்கு அமைதி பேரணி நடத்த திட்டமிட்டுள்ளார் அழகிரி. இதற்காக பல்வேறு மாவட்ட ஆதரவாளர்களுடன் அவர் தினந்தோறும் மதுரையில் உள்ள அவரது வீட்டில் ஆலோசனை நடத்தி வருகிறார்.
கடந்த மாதம் 30-ம் தேதி அன்று செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, ''கட்சியில் சேரும் எண்ணம் இருந்தால், ஸ்டாலினைத் தலைவராக ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். கட்சியில் மீண்டும் இணைய தனக்கோ தன் மகன் தயாநிதி அழகிரிக்கோ கட்சியில் எந்தப் பதவியும் தரத் தேவையில்லை'' என்றார்.
மேலும், ''உண்மையான கட்சித் தொண்டர்கள் என் பக்கம் இருக்கிறார்கள். அமைதிப் பேரணிக்குப் பிறகு அந்த எண்ணிக்கை அதிகரிக்கும்'' என்றும் அழகிரி கூறியிருந்தார்.
இந்நிலையில், இன்று மதுரை சத்யசாய் நகரில் உள்ள தனது இல்லத்தில் அமைதிப் பேரணி குறித்து அழகிரி தன் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப் பிறகு அழகிரியிடம் அமைதிப் பேரணியில் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்களா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அழகிரி, 'நான் தலைவர் கருணாநிதியின் மகன். சொன்னதைச் செய்வேன்' என்றார்.
ஸ்டாலினை தலைவராக ஏற்கத் தயார் எனக் கூறியும் திமுகவில் சேர உங்களுக்கு அழைப்பு வரவில்லையே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, 'கருத்து கூற விரும்பவில்லை' என அழகிரி பதில் அளித்தார்.