Advertisment

தேர்தல் களத்தில் மு.க.அழகிரி ஆதரவாளர்... கவனம் ஈர்க்கும் கபிலன்!

Tamilnadu News Update : ஆசாரிப்பள்ளம் பேரூர் திமுக முன்னாள் செயலாளரான கபிலன், மு.க அழகிரி அரசியலில் ஆக்டிவாக இருந்த நாட்களில் அவரது குமரி மாவட்ட தளபதியாக இருந்தவர்.

author-image
WebDesk
New Update
தேர்தல் களத்தில் மு.க.அழகிரி ஆதரவாளர்... கவனம் ஈர்க்கும் கபிலன்!

Tamilnadu Local Body Election Update : இந்த உள்ளாட்சித் தேர்தலை தி.மு.க எதிர்கொள்ளும் விதத்தில் ஒரு தனித்துவம் உண்டு. முன்பு எந்த தேர்தலாக இருந்தாலும் சிலராவது அழகிரி கோஷ்டி, கனிமொழி கோஷ்டி என அடையாளம் காட்டப்படுவார்கள். ஆனால் நடப்பு உள்ளாட்சித் தேர்தலில் தமிழகம் முழுக்க தி.மு.க சார்பில் போட்டியிடும் அத்தனை பேருமே கிட்டத்தட்ட ஸ்டாலின் கோஷ்டி தான்.     

Advertisment

தென் மாவட்டங்களில் கோலோச்சி வந்த கலைஞரின் மூத்த மகன் மு.க அழகிரி முழுமையாக தனது அரசியல் நடவடிக்கைகளை முடக்கிக் கொண்டார். ஆனால் அழகிரியே எதிர்பாராத விதமாக அவரது ஆதரவாளர் ஒருவர் மாநகராட்சி வார்டு தேர்தலில் கில்லியாக களமிறங்கி திமுக, பாஜகவுக்கு கிலி ஏற்படுத்துவது தென் மாவட்டங்களில் ஹாட் டாப்பிக்காக இருக்கிறது.          

அந்த நபர், பெ. கபிலன். நாகர்கோவில் மாநகராட்சியில் ஆசாரிப்பள்ளம் பகுதியை உள்ளடக்கிய 18வது வார்டில் சுயேட்சையாக களம் இறங்கி இருக்கிறார் கபிலன். ஆசாரிப்பள்ளம் பேரூர் திமுக முன்னாள் செயலாளரான கபிலன், மு.க அழகிரி அரசியலில் ஆக்டிவாக இருந்த நாட்களில் அவரது குமரி மாவட்ட தளபதியாக இருந்தவர்.

கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு மதுரையில் அழகிரி கூட்டிய ஆலோசனை கூட்டத்திற்கு பெருமளவில் தொண்டர்களை திரட்டிச் சென்றவர். அந்தக் கூட்டத்தில் அழகிரி பேசுகையில் பெயரைக் குறிப்பிட்டு கூறிய 2 மாவட்ட பொறுப்பாளர்களில் கபிலனும் ஒருவர். அவரே இப்போது நாகர்கோவில் 18வது வார்டில் அரசியல் கட்சிகளுக்கு பலத்த போட்டியை கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

கபிலன் அவர் போட்டியிடும் ஆசாரிப்பள்ளம் பகுதியில் மிகவும் பரிச்சயமானவர். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக அதே பகுதியில் அரசியல் செய்கிறார். கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இந்தப் பகுதியில்தான் இருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் இருந்து திமுக தொண்டர்களும் நிர்வாகிகளுக்கு வேண்டியவர்களும் ஏதேனும் சிகிச்சை விஷயமாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வருவதாக இருந்தால் முதலில் தொடர்பு கொள்வது கபிலன்-ஐ தான். அந்த வகையில் இவர் அழகிரி ஆதரவாளராக இருந்தாலும் மாவட்டம் முழுவதும் திமுக தொண்டர்கள் மத்தியில் பிரபலமானவர்.

அதேபோல உள்ளூர் திமுக தொண்டர்கள் மத்தியிலும் செல்வாக்கு செலுத்தக் கூடியவர். இதனால் இந்த வார்டை முதலில் காங்கிரசுக்கு தள்ளிவிட தயாரானது திமுக. ஆனால் காங்கிரஸ் கட்சி பிரமுகர்களும் இந்த வார்டை ஏற்க மறுத்துவிட்டனர். எனவே தற்போது திமுகவே தனது வேட்பாளராக கமல செல்வம் என்பவரை நிறுத்தியிருக்கிறது.

அதிமுக சார்பில் கூட்டுறவு அமைப்பில் பொறுப்பு வகித்த பள்ளவிளை ராஜேஷ் களத்தில் நிற்கிறார். பாஜக, தேமுதிக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்களும் களத்தில் நிற்கிறார்கள். இதர கட்சியினர் அனைவரும் வேட்பாளர் அறிவிப்புக்கு பிறகு களத்தில் இறங்கி பணியை தொடங்கினார்கள். ஆனால் அழகிரி ஆதரவாளரான கபிலன் அதற்கு முன்பாகவே வீடு வீடாக சென்று தேர்தல் பணியை தொடங்கிவிட்டார்.

ஏற்கனவே இந்த பகுதியில் ரேஷன் கடை பிரச்சனை, குளங்கள் ஆக்கிரமிப்பு பிரச்சனை, விளையாட்டு மைதான பிரச்சனை, குடிநீர் பிரச்சனை என பொதுமக்களின் அத்தனை பிரச்சினைகளுக்கும் மாநகராட்சி அலுவலக கதவுகளை தட்டி வந்தவர் கபிலன். 'பதவியே இல்லாமல் நான் செய்த பணிகளை உங்கள் பிரதிநிதியாக செய்யும் வாய்ப்பை தாருங்கள்' என அவர் மேற்கொண்டு வரும் பிரச்சாரம் அந்த வார்டு மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மதுரையில் இருந்து அழகிரியும் இந்த வார்டு நிலவரங்களை உன்னிப்பாக கவனித்து வருவதாக சொல்கிறார்கள்.

தேர்தல் களத்தில் பிரதான கட்சிகள் கடைசி கட்டத்தில் பணத்தை அள்ளி வீசும் முயற்சிகள் தெரிகின்றன. பணமா, பாசமா? என்கிற ரீதியில் இந்த வார்டு களை கட்டியிருக்கிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Local Body Election
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment