சென்னை- மதுரை தேஜஸ் விரைவு ரயில் புதிதாக தாம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் சேவையை தொடங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (பிப்.26) நடைபெற்றது. இதில் மத்திய இணையமைச்சர் எல். முருகன், தி.மு.க எம்.பி டி.ஆர் பாலு ஆகியோர் கலந்து கொண்டனர். தாம்பரத்தில் தேஜஸ் ரயில் நின்று செல்வதற்காக தி.மு.க மேற்கொண்ட முயற்சிகள் இருட்டடிப்பு செய்யப்பட்டதாக கூறி டி. ஆர் பாலு ரயில் புறப்படுவதற்கான கொடியை வாங்க மறுத்து, விழாவில் பேச மறுத்தார்.
தாம்பரம் ரயில் நிலையத்தில் நடந்த விழாவில் ரயில் சேவையை மத்திய இணையமைச்சர் எல். முருகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்ட தேஜஸ் விரைவு ரயில் முதல் முறையாக தாம்பரத்தில் நின்று சென்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாலு, “எனக்கு 5 நிமிடம் மட்டுமே பேச அவகாசம் வழங்கப்பட்டது. அதனால் இத்திட்டத்தில் தி.மு.கவின் பங்களிப்பு குறித்து பேச முடியவில்லை என்பதால் விழாவில் பேச மறுத்தேன். தி.மு.கவின் சாதனைகள் வேண்டுமென்றே மறைக்கப்படுகின்றன" என்றார்.
மேலும் கூறுகையில், "ஜூன் 18, 2019 அன்று நான் எம்.பி.யாகப் பொறுப்பேற்றேன். ஆனால் அதற்கு முன்பே தாம்பரத்தில் தேஜஸ் ரயில் நிறுத்தக் கோரி மத்திய அரசிடம் மனு அளித்தேன்" என்று கூறினார்.
விழாவிற்கு பின் பாலு வெளியிட்ட அறிக்கையில், தன்னுடைய முயற்சியால் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் தற்போது தாம்பரத்தில் நின்று செல்கிறது. தன்னுடைய தொடர் முயற்சியால் ரயில் தாம்பரத்தில் நின்று செல்லும் உத்தரவை ரயில்வே பிறப்பித்துள்ளது. இதன் மூலம் தென் மாவட்டங்களுக்கு செல்லும் லட்சக்கணக்கான பயணிகள் பயனடைவார்கள் என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil