அ.தி.மு.க.வுடன் கூட்டணிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, தனது நிலைப்பாட்டில் மாற்றம் கொண்டு வருவது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Back from a sabbatical in UK, why Tamil Nadu BJP chief Annamalai is likely rethinking his stand against AIADMK
ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் இருந்து திரும்பிய அண்ணமாலை, அ.தி.மு.கவுடன் மீண்டும் கூட்டணியை தொடங்குவதற்கு சாத்தியக்கூறுகள் இருக்கும் வகையில் பேசியுள்ளார்.
முன்னதாக, பா.ஜ.கவுடன் கூட்டணி இல்லை என அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். இதனிடையே, கடந்த செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, "அ.தி.மு.க உடனான அழைப்பிற்கு இன்னும் அவகாசம் இருக்கிறது. 2025-ஆம் ஆண்டில் சூழல் எவ்வாறு இருக்கிறது என்பதை பொறுத்திருந்த பார்க்கலாம். தேசிய பார்வை கொண்ட தலைவர்கள் எங்களுடன் இருக்கிறார்கள். 2025-ல் ஒரு முடிவு எட்டப்படும். எடப்பாடி பழனிசாமி தனது உரையில் பா.ஜ.க குறித்து கூறும் போது, 2026 குறித்து எங்களுக்கு ஒன்று தெரிகிறது. தி.மு.கவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பதே பிரதானமாக உள்ளது. இதற்காக அனைவரும் ஒன்றிணைவோமா என்று கேட்டால், அனைத்தும் சாத்தியம் என்று கூறுவேன்" எனத் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க.வுடனான கூட்டணி முறிந்ததற்கு பா.ஜ.க.வினர் பலர், அண்ணாமலையின் மோதல் போக்கு தான் காரணம் எனக் கூறினர். அதற்கு முற்றிலும் மாறுபட்ட அணுகுமுறை தற்போது தெரிகிறது. அ.தி.மு.க தலைவர்கள் குறித்து அண்ணாமலையின் கருத்துகள், சீரமைக்க முடியாத விரிசலை உருவாக்கியது. இதனால் செப்டம்பர் 2023-ல் இரு கட்சியினரும் கூட்டணியை முறித்துக் கொண்டனர்.
"பொதுச் செயலாளர் பழனிசாமி, பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என திட்டவட்டமாக கூறிவிட்டார்" என்று அ.தி.மு.க மூத்த நிர்வாகி கோவை சத்யன் தெரிவித்துள்ளார். மேலும், "அ.தி.மு.க.வில் ஏக்நாத் ஷிண்டேவை தேடும் அண்ணாமலையின் முயற்சி பலனளிக்காது. மகாராஷ்டிராவில் சிவ சேனாவிற்கு என்ன நடந்தது என நாங்கள் தெளிவாக இருக்கிறோம். அவர் தி.மு.க.வுடன் முயற்சி செய்து பார்க்கலாம்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்ணாமலைக்கு அ.தி.மு.க தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அளிக்கப்பட்ட பதில், அவர்களின் நிலையை நன்கு உணர்த்தின. குறிப்பாக கடந்த ஆகஸ்ட் மாதம், அரசியலை வழிநடத்த அண்ணாமலை தகுதியற்றவர் என மூத்த அ.தி.மு.க தலைவர் ஜெயக்குமார் கூறியிருந்தார்.
"அ.தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது. அழிக்க நினைப்பவர்கள் தான் அழிந்து போவார்கள். முடிந்தால் 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க சொந்தமாக ஒரு தொகுதியாவது வென்று காண்பிக்கட்டும்" என ஜெயக்குமார் தெரிவித்தார்.
அ.தி.மு.க.விற்கு எதிராக இருந்த அண்ணாமலையின் முந்தைய மோதல் போக்கில், தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளதாக பா.ஜ.க மூத்த தலைவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். இதனிடையே, ஆக்ஸ்ஃபோர்டில் மூன்று மாத காலம் தலைமைத்துவ திறன்களை மேம்படுத்துவதற்கான பயிற்சியில் அண்ணாமலை பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
"அண்ணாமலையின் போக்கில் மாற்றம் என நீங்கள் கூறினால், அவர் லண்டன் சென்று வந்ததில் இருந்து தான் இந்த மாற்றம் என நான் கூறுவேன். இந்த இடைப்பட்ட காலம் அவரது நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்யும் வகையில் அமைந்திருக்கலாம். அண்ணாமலையின் புதுமையான சிந்தனை, அவரது சமீபத்திய பேச்சில் தெரிகிறது" என பா.ஜ.க தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழகத்தின் அரசியல் களத்தை அண்ணாமலை உணர்ந்திருக்கலாம் என ஆர்.எஸ்.எஸ் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த சூழலில், நடிகர் விஜய்யின் அரசியல் வருகையும், மாநில அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டின் போதும், தி.மு.க மற்றும் பா.ஜ.க.வை விமர்சிக்கும் விதமாக உரையாற்றபட்டது. ஆனால், அ.தி.மு.க குறித்து எந்த விதமான கருத்துகளும் கூறாத நிலையில், இரு கட்சியினரும் கூட்டணி அமைக்க வாய்ப்பு இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இவ்வாறு கூட்டணி அமைந்தால், பா.ஜ.க ஓரங்கட்டப்படலாம்.
"அ.தி.மு.க.விற்கு எதிரான அண்ணாமலையின் ஆரம்ப நிலைப்பாடு வேறு சூழலில் அமைந்தது. ஆனால், விஜய்யின் வருகை களத்தை முற்றிலும் மாற்றிவிட்டது" என ஆர்.எஸ்.எஸ் தலைவர் தெரிவித்துள்ளார். "விஜய் மற்றும் அ.தி.மு.க இடையே கூட்டணி அமைந்தால் தி.மு.க.விற்கும் அது சவாலாக அமையும். அவ்வாறு நிகழ்ந்தால், பா.ம.க.வும் அ.தி.மு.க.வுடன் இணைய வாய்ப்புள்ளது. அப்படி நிகழ்ந்தால், பா.ஜ.க.வின் கூட்டணி மிக பலவீனமாக மாறிவிடும். அவர்களுடன் கூட்டணியில் இருக்கும் ஓபிஎஸ் மற்றும் டி.டி.வி தினகரனால் பா.ஜ.க.வின் செயல்பாட்டை சிறப்பாக மாற்ற முடியாது" என ஆர்.எஸ்.எஸ் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பில், 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது பெரிய மாற்றத்தை பா.ஜ.க எதிர்பார்ப்பதாக அண்ணாமலை தெரிவித்தார். "திராவிட கட்சிகளால் சொந்த அரசாங்கத்தை அமைக்க வாய்ப்பில்லை. திராவிடம் அல்லாத கட்சி ஆட்சியமைப்பதற்கான சூழலை ஆராய்ந்து வருகிறோம். புதிய அரசியல தமிழக மக்கள் விரும்புகின்றனர்" என அவர் தெரிவித்துள்ளார்.
- Arun Janardhanan
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.