கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், சிறுமுகை வனப்பகுதிகளில் ஏராளமான காட்டு யானை, மான், காட்டெருமை, சிறுத்தை, காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு வகை வனவிலங்குகள் இருந்து வருகின்றன. இந்த வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி அவ்வப்போது ஊருக்குள் நுழைந்து விளைநிலங்களில் பயிர்களை சேதம் செய்வதோடு, மனிதர்களையும் அச்சுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே ஆஜானுபாகுவான தோற்றம் கொண்ட யானைபாகுபலி என மக்களால் பெயரிட்டு அழைக்கப்படும் ஒற்றை காட்டு யானையின் நடமாட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான தேக்கம்பட்டி, தாசம்பாளையம், சமயபுரம், நெல்லித்துறை, ஓடந்துறை, ஊமப்பாளையம், பாலப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்றிரவு சிறுமுகை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய பாகுபலி யானை ஊமப்பாளையம் பகுதியில் மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய பகுதிகளை ஒட்டியுள்ள விளைநிலங்களில் சர்வ சாதாரணமாக உலா வந்தது.
இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். சற்று நேரத்தில் பாகுபலி மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் அச்சமடைந்தனர்.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் கூறுகையில் சமீபகாலமாக பாகுபலி யானையின் நடமாட்டம் என்பது அதிகமாகவே இருந்து வருகிறது. இதனால் விளைநிலங்களில் இரவு காவல் பணிக்கும், பகல் நேரங்களில் தோட்டப் பணிகளுக்கும் கூலி தொழிலாளர்கள் வேலைக்கு வருவதற்கு அச்சப்படுகின்றனர்.
இதனால் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து பாகுபலி யானையை அடர் வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“