ஹீலர் பாஸ்கர்: வீட்டில் சுகப்பிரசவம் பார்க்க பயிற்சி அளிக்கப்படும் என்று அறிவித்ததால், கோவையில் கைது செய்யப்பட்ட ஹீலர் பாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
கோவை நிஷ்டை மையத்தின் உரிமையாளராக இருப்பவர் ஹீலர் பாஸ்கர். இவர், வீட்டில் சுகப்பிரசவம் பார்க்க பயிற்சி அளிக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில், மோசடி புகாரின் பேரில் கோவை குனியமுத்தூர் போலீசார் இவரை கடந்த ஆக.2ம் தேதி கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து, “வீட்டில் பிரசவம் பார்க்கலாம், தடுப்பூசி வேண்டாம் என பொய் பிரச்சாரம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அறிவியலுக்கு புரம்பாக செயல்படுவது, வதந்தியை பரப்புவது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதியப்படும்” என சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதைத் தொடர்ந்து, ஹீலர் பாஸ்கர் மற்றும் அவரது மேலாளர் சீனிவாசன் ஆகியோர் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது.
கோவை நீதிமன்றத்தில் இருவரையும் ஆஜர்படுத்திய போலீசார், 15 நாள் காவலில் எடுத்து, தீவிரமாக விசாரித்து வந்தனர். இந்த நிலையில், ஹீலர் பாஸ்கருக்கு கோவை குற்றவியல் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது.
அடுத்த 30 நாட்களுக்கு குனியமுத்தூர் காவல் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஹீலர் பாஸ்கரின் மேலாளர் சீனிவாசனுக்கும் ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.