சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்ட வேந்தர் மூவீஸ் மதனுக்கு ஜாமின் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம்.
மருத்துவ கல்லூரிகளில் இடம் பெற்று தருவதாக கூறி மாணவர்களிடம் 84.24 கோடி ரூபாய் பணத்தை மதன் வசூலித்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலிசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் 179 நாட்கள் தலைமறைவாகியிருந்த மதனை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து இந்த வழக்கில் மதன் 10 கோடி ரூபாய் செலுத்தி ஜாமின் பெற்று வெளியே வந்தார்.
இந்நிலையில் மருத்துவ இடம் வாங்கித் தருவதாக கூறிய விவகாரத்தில் 84.24 கோடி ரூபாய் பணம் பரிமாற்றம் செய்ததாக அமலாக்கத்துறை, மதனை கடந்த மே 23ம் தேதி கைது செய்தது. இந்த வழக்கில் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மதன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.என்.பிரகாஷ், மதன் சென்னையில் 50 ஆயிரம் தொகைக்கான ஜாமினும் அதே தொகைக்கான இரு நபர் உத்தரவாதம் அளிக்க வேண்டும். விசாரணைக்கு அழைக்கும் பட்சத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.