சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் கைதான முன்னாள் துணை ஆய்வாளர் ரகுகணேசன் ஜாமின் கோரி மதுரை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
குற்றவியல் விசாரணை தாமதமாக நடைபெறுவதால் ஜாமின் வழங்கப்பட வேண்டும் என ரகுகணேசன் கோரியிருந்தார். சி.பி.ஐ தரப்பு மற்றும் ஜெயராஜின் மனைவி தரப்பு ஆகியோரால் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஜாமீன் வழங்கப்பட்டால், விசாரணை பாதிக்கப்படுவதோடு, சாட்சிகளை மிரட்டவும், தடயங்களை அழிக்கவும் வாய்ப்பு உள்ளதாக வாதிடப்பட்டது.
இதை ஏற்று, நீதிபதி ரகுகணேசனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இது ரகுகணேசனின் ஜாமீன் மனு தள்ளுபடியாவது 5வது முறையாகும். மேலும், இந்த வழக்கு விசாரணையை 2 மாதங்களுக்குள் முடிக்கவும் மதுரை கீழமை நீதிமன்றத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு, 2024 மே மாதம், உயர் நீதிமன்ற மதுரைக் கிளை 3 மாதங்களுக்குள் விசாரணையை முடிக்க உத்தரவிட்டிருந்தது. பின்னர், அக்டோபர் 2024-ல், 4 மாத அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால், விசாரணை இன்னும் முடிவடையாத நிலையில், தற்போது மீண்டும் 2 மாத காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.