கோவை, ஆர்.எஸ்.புரம் லாலிரோடு பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவர் அதே பகுதியில் பேக்கரி உணவு பண்டங்கள் விற்கும் கடை வைத்து நடத்தி வருகிறார்.
நேற்று சுமார் 9 மணி அளவில் பேக்கரிக்கு அருகில் இருக்கும் முதியவர் ஒருவர் திடீரென அதிக ஒலி எழுப்பக் கூடிய பட்டாசை வைத்ததாக தெரிகிறது. இதை சற்றும் எதிர்பார்க்காத சாலையில் சென்று கொண்டு இருந்த பெண்கள், மற்றும், பொதுமக்கள் அலறி அடித்து ஓடி உள்ளனர்.
இதனால் முருகேசன், பட்டாசு வெடித்த முதியவரை அழைத்து ஏன் இப்படி செய்கிறீர்கள், என்று கேட்டதாக தெரிகிறது.
அதை தொடர்ந்து முதியவரின் மருமகன் தங்கமணி என்ற வெங்கடாச்சலம், அவரது மகன் கீர்த்திவாசன் ஆகியோர் முருகேசனின் பேக்கரிக்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
மேலும் வாக்குவாதம் முற்றிய நிலையில் இருவரும் சேர்ந்து முருகேசனை கடுமையாக தாக்கி உள்ளனர். இந்தத் தாக்குதல் சம்பவம் நடக்கும் போது முருகேசன் கழுத்தில் அணிந்து இருந்த தங்க சங்கிலி, மற்றும் சட்டை பையில் வைத்து இருந்த 11 ஆயிரம் காசோலை ஆகியவை மாயமாகி உள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான முருகேசனுக்கு, முகம், கழுத்து உட்பட உடலில் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து முருகேசன் காவல் உதவி எண் 100 க்கு அழைத்து புதார் அளித்து உள்ளதை அடுத்து ஆர்.எஸ்.புரம் காவல் நிலைய போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.