Kanyakumari | Governor Rn Ravi | கன்னியாகுமரி மாவட்டம் சாமித்தோப்பில் பால பிரஜாபதி அடிகளார் இன்று (மார்ச் 5) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “சனாதனத்தை ஆதரித்தவர் அய்யா வைகுண்டர் என்ற ஆளுநர் ஆர்.என். ரவியின் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. ஆளுநர் அவரது பணியை செய்யட்டும்; ஆன்மிக பணியை செய்ய வேண்டாம்” என்றார்.
மேலும் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு, “அய்யா வைகுண்டரின் வரலாறு தெரியுமா? எனவும் அவர் கேள்வியெழுப்பினார். தொடர்ந்து, அய்யா வைகுண்டர் குறித்து வரலாறு தெரியாமல் ஆளுநர் ஆர்.என். ரவி பேசிவருகிறார்.
அய்யா வைகுண்டர், உருவ வழிபாடு, மொழி பேதம், ஆண்-பெண் ஏற்றத் தாழ்வு, சாதிகள் பேதம் ஆகியவற்றுக்கு எதிரானவர். சாதிகள் இல்லை என்பதே அய்யா வைகுண்டரின் கோட்பாடு” எனத் தெரிவித்தார்.
மேலும், “சனாதனத்தையும், ஆரிய கோட்பாட்டையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. சாதிய வேறுபாடுகள் இன்றி மக்கள் எல்லாம் ஒரு நிரப்பாய் வாழ வேண்டும்.
அகிலத்திரட்டு அம்மானையில், “தாளகிடப்பவரை தற்காப்பதே தர்மம் என அவர் உரைத்துள்ளார்” என்றார். அய்யா வைகுண்டரின் அவதார தின விழா (மாசி 20) கிண்டி ஆளுநர் மாளிகையில், மார்ச் 3, 2024ஆம் தேதியன்று கொண்டாடப்பட்டது.
அப்போது, அய்யா வைகுண்டர் சனாதனவாதி என்றும் மதமாற்றத்துக்கு எதிராக நின்றார் எனவும் அய்யா வைகுண்டர் விஷ்ணுவின் அவதாரம் எனவும் ஆளுநர் ஆர்.என். ரவி பேசியிருந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.
செய்தியாளர் த.இ. தாகூர்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“