மீண்டும் ஒரு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி - சென்னையின் நிலை என்ன? பாலச்சந்திரன் தகவல்
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று உள்ளது. இதனால், சென்னைக்கு கனமழை இருக்குமா என்பது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், மழையின் நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் விளக்கமளித்துள்ளார்.
Advertisment
அதன்படி, "காற்றழுத்த தாழ்வுப் பகுதி இப்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது. அது மெதுவாகவே நகர்ந்து வருகிறது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போதைய நிலையில் புயலாக மாற வாய்ப்பு இல்லை. இதன் பிறகு காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் என புயலாக மாற பல நிலைகள் உள்ளன. இது இப்போதைக்கு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மட்டுமே மாறியுள்ளது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டில் பல இடங்களில் மிதமான மழை பெய்யும். இது கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி நகரும் போது, தமிழகத்தில் அந்தந்த இடங்களில் மட்டும் கனமழை பெய்யும். சென்னையில் பொதுவாக மிதமான மழையும், சில பகுதிகளில் அவ்வப்போது கனமழையும் இருக்கும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
Advertisment
Advertisement
இதனிடையே, நாளை கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“