Tamilnadu-rain: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென்தமிழகம், வட தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இன்று முதல் 7 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
அதன்படி, தமிழ்நாட்டின் நாகப்பட்டினம், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, விழுப்புரம், கடலூர், திருவாரூர், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, அரியலூர், கள்ளக்குறிச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சீர்காழியில் 24 செ.மீ., மழைப்பதிவாகியுள்ளது. சிதம்பரத்தில் 23 செ.மீ., வேளாங்கண்ணியில் 22 செ.மீ., திருவாரூர், நாகையில் தலா 21 செ.மீ., மழைப்பதிவாகியுள்ளது.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 5 இடங்களில் அதிகனமழை பெய்துள்ளது என்றும், திருவாரூர், நாகை, கடலூர், மயிலாடுதுறை, மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு என்றும் வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், "வடகிழக்கு பருவமழை தொடர்ந்து தீவிரமாகவே உள்ளது. கடந்த 4 ஆண்டுகளாகவே ஜனவரியிலும் வடகிழக்கு பருவமழை தொடர்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் 5 இடங்களில் அதிகனமழை பெய்துள்ளது. 2 நாட்களுக்கு பிறகு மழை படிப்படியாக குறையும். தென்மாவட்டங்களில் கனமழை நீடிக்கும்.
சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகனமழைக்கு வாய்ப்பில்லை. ஆனால் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. ஜனவரி மாதத்தில் கடலூரில் 130 ஆண்டுகளில் 2-வது முறையாக அதிகபட்சமாக மழை பதிவாகியுள்ளது.
புதுச்சேரியில் ஜனவரி மாதத்தில் நேற்று பெய்ததே அதிகபட்ச மழையாகும். அதிகபட்சமாக சீர்காழியில் 24 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
திருவாரூர், நாகையில், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. டெல்டா மாவட்டங்களில் இன்றும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது." என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“