அம்பாசமுத்திரம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சுமார் 10 இளைஞர்களின் பற்களை தட்டி உடைத்தும் விதைகளை நசுக்கியும் குரூர சித்ரவதை செய்ததாக ஐ.பி.எஸ் அதிகாரி பல்வீர் சிங் மீது புகார் எழுந்த நிலையில் அவர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், ஐ.பி.எஸ் அதிகாரி பல்பீர் சிங். இவர் அம்பாசமுத்திரம் பகுதியில் சிறிய குற்றங்களில் ஈடுபடுபவர்களைக்கூட, காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து அவர்களின் பற்களை உடைத்தும் விதைகளை நசுக்கியும் குரூரமாக சித்திரவதை செய்வதாக பகீர் குற்றசாட்டுகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
இது குறித்து திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி. சரவணன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், ஏ.எஸ்.பி பல்வீர் சிங் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் பேரில், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கே.பி. கார்த்திகேயன் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர்கள் அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் பற்களை உடைத்து குரூர காவல் நிலைய சித்ரவதை செய்த புகாரில், ஐ.பி.எஸ் அதிகாரி பல்வீர் சிங் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். மேலும், ஸ்ரீவைகுண்டம் முன்னாள் டி.எஸ்.பி வெங்கடேசன், பொறுப்பு டி.எஸ்.பி-யாக நியமனம் நியமனம் செய்து தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் 3 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கிராம நிர்வாக அலுவலர் உடன் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க விசாரணை அதிகாரியான சார் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மதியம் 1 மணிக்கு பாதிக்கப்பட்ட லெட்சுமி சங்கர், சுபாஷ், வெங்கடேஷ் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது.
இதனிடையே, குரூர காவல்நிலைய சித்ரவதையில் ஈடுபட்ட ஐ.பி.எஸ் அதிகாரி பல்வீர் சிங் கைது செய்யப்பட வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"