Sri Subramania Swamy Temple | Ban on cell phones in Tiruchendur Murugan Temple | திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் செல்போன் பயன்பாட்டிற்குத் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்த நிலையில் நீதிமன்ற உத்தரவுகள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருச்செந்தூர் கோவிலில் செல்போன் பயன்பாட்டிற்கு தடை விதிக்க கோரி, அக்கோவில் அர்ச்சகர் சீதா ராமன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறுகையில், கோயிலில் உள்ளே அர்ச்சகர்களே புகைப்படங்கள் எடுத்து அவருடைய தனிப்பட்ட யூடியூப் சேனலில் பதிவிடுகின்றனர். இது ஏற்கத்தக்கது அல்ல. தமிழ்நாட்டில் உள்ள கோயில்கள் சத்திரமா? தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலை உள்ளது. திருப்பதி கோயிலின் வாசலில் கூட புகைப்படங்கள் எடுக்க முடியாது. தமிழ்நாட்டில் சாமி சிலைகள் முன்னால் இருந்து செல்பி எடுத்துக் கொள்கின்றனர். கோயில்கள் சுற்றுலா தலங்கள் அல்ல.
கோயில்களுக்கு வருபவர்கள் நாகரிகமான உடைகள் அணியாமல் டீ ஷர்ட், ஜீன்ஸ், ஷார்ட்ஸ், லெக்கின்ஸ் போன்ற உடைகள் அணிந்து வருவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. திருச்செந்தூர் கோயிலில் உள்ளே செல்போன் பயன்பாட்டிற்கு உடனடியாக தடை விதிக்க இந்து அறநிலையத்துறை ஆணையருக்கு உத்தரவிடப்படுகிறது. மேலும் திருச்செந்தூர் கோயிலின் உள்ளே அர்ச்சகர் உட்பட யாருக்கும் செல்போன் கொண்டு செல்ல அனுமதிக்க கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இந்த நிலையில் கோவிலில் நீதிமன்ற உத்தரவுகள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என கோவில் இணை ஆணையர் அன்புமணி மற்றும் அறங்காவல் குழு தலைவர் அருள் முருகன் ஆகியோர் தெரிவித்தனர்.
பக்தர்கள் மற்றும் அர்ச்சகர்களின் செல்போன்களை பாதுகாப்பாக வைப்பதற்கு தனி அறை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற கட்டுப்பாடுகளை கோவில் வளாகங்களில் அறிவிப்பு பலகைகள் மூலம் அறிவிப்பு செய்து பின்னர் விரைவில் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படும்.
அத்துடன், டீ சர்ட் , ஜீன்ஸ், லெக்கின்ஸ் அணிந்து வருபவர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். கோவிலில் தரிசன நேரங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வரும் பதிவுகளை யாரும் நம்ப வேண்டாம். 300 கோடி பெருந்திட்ட பணிகள் நடைபெற்று வந்தாலும் பக்தர்கள் வழக்கம்போல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“