கோவை தடாகம் பகுதியில் செங்கல் சூளைகள் செயல்பட்டு வந்தன. அனுமதியற்ற முறையிலும் மாசு ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால் செங்கல் சூளைகள் ஏற்கனவே மூடப்பட்டு உள்ளன.
மின் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டு உள்ளன. செங்கல் சூளைகள் மீண்டும் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று ஒரு தரப்பினரும், நிரந்தர தடை வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் தேசிய தீர்ப்பாயம் மற்றும் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.
தடாகம் பகுதியில் செங்கல் சூளைகளுக்கு நிரந்தர தடை கோரி நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் மாணிக்கராஜ் என்பவர் தேசிsய பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார்.
இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாய உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் செங்கல்சூளைகள் இயங்க தடை விதித்து உத்தரவிட்டனர்.
அந்த உத்தரவில் கூறும்போது, சட்ட விரோத செங்கல்சூளைகளை முற்றிலும் அகற்ற வேண்டும். அனுமதியின்றி சூளைகள் செயல்படும் போது அது சட்ட விரோதமாக கருதப்படுகிறது.
இயற்கை எரிவாயு, நிலக்கரி போன்றவற்றை எரிபொருளாக செங்கல் சூளைகள் பயன்படுத்தி இருக்க வேண்டும். விறகு முதலியவற்றை பயன்படுத்தக் கூடாது. 2022-ம் ஆண்டுக்கு முன்போ, பின்போ எந்த சூழ்நிலையில் தொடங்கப்பட்டாலும் விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் அது தொடர்ந்து செயல்பட அனுமதிக்க முடியாது.
சட்ட பூர்வமாக தேவையான அனைத்து அனுமதி, உரிமங்கள் மற்றும் சம்மதத்தை பெற்று இருந்தால் மட்டுமே சட்ட பூர்வமாக இருக்க முடியும். ஆனால் இங்கு அப்படி அல்ல. பல செங்கல்சூளைகள் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 300 மீட்டருக்குள் உள்ளன.
உரிமம் இல்லாமலும், விதிமுறை மீறலுடனும் செயல்படும் செங்கல்சூளைகள் நடத்தினால் உடனடியாக மூட உத்தரவிட வேண்டும். செயல்பட அனுமதிக்க முடியாது. மாசுகட்டுப்பாட்டு வாரியம் தனது அதிகாரிகளுக்கு சரியான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.
செய்தி: பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“