ஆன் லைன் மூலம் பட்டாசு விற்பனை செய்யும் இணையதளங்களை முடக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது ஆன் லைன் மூலம் பட்டாசு விற்க தடை விதிக்க கோரி சென்னையைச் சேர்ந்த பட்டாசு வியாபாரி ஷேக் அப்துல்லா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஆன் லைனில் பட்டாசுகள் விற்க தடை விதித்து உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த தடை உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை துணைத் தலைவர் சஞ்சனா சர்மா, சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆகியோருக்கு எதிராக ஷேக் அப்துல்லா நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், ஆன் லைன் பட்டாசு விற்பனைக்கு தடை விதித்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அனுப்பி வைத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்காத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்க எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
தற்போது தீபாவளி பண்டிகையை ஒட்டி சட்டவிரோதமாக ஆன் லைனில் பட்டாசு விற்பனைகள் துவங்கி விட்டதால், ஆன் லைன் மூலம் பட்டாசு விற்பனை செய்யும் இணையதளங்களை முடக்க சைபர் குற்றப் பிரிவு கூடுதல் டிஜிபி-க்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆதிகேசவலு, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, ஆன் லைன் மூலம் பட்டாசு விற்பனை செய்யும் இணையதளங்களை முடக்க உத்தரவிட்டார். மேலும், ஆன் லைன் மூலம் பட்டாசுகள் விற்பவர்களுக்கு தண்டனை விதிக்கப்படும் என விளம்பரப்படுத்த நடவடிக்கை எடுக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.