பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக சென்னை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் புதன்கிழமை காலை சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
பெங்களூருவில் உள்ள ராமேசுவரம் கஃபே ஓட்டலில் கடந்த 1 ஆம் தேதி குண்டு வெடித்தது. இதில் 10 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து பெங்களூரு போலீஸார் 8 தனிப்படைகளை அமைத்து விசாரணையை தொடங்கினர். இதில், சந்தேகிக்கப்படும் குற்றவாளி வாடிக்கையாளர் போல ஓட்டலுக்குள் நுழைந்தது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.
இதையடுத்து இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இதில் சந்தேகிக்கப்படும் குற்றவாளி, உணவகத்தில் குண்டு வைத்துவிட்டு அங்கிருந்து அரசுப் பேருந்து மூலம் துமக்கூரு சென்றது சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.
இதையடுத்து, என்ஐஏ அதிகாரிகள், பல நூறு கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கைப்பற்றி ஆய்வு செய்தனா்.
இந்த நிலையில், குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக சபீர் என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான கா்நாடக மாநிலம் ஷிவமோகாவைச் சோ்ந்த முஸாவிர் ஹூசைன் ஷாஜிப், அவனது கூட்டாளி அப்துல் மாத்தேன் தாஹா ஆகிய இருவர் சென்னையில் சில நாட்கள் தங்கியிருந்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், சென்னை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக, மண்ணடி மூட்டைக்காரன் தெருவில் உள்ள அப்துல்லா என்பவர் வீட்டில் சோதனை நடத்தப்படுகிறது. அது போல் முத்தியால்பேட்டை சாலை விநாயகர் கோயில் தெருவில் உள்ள ஒருவரது வீட்டிலும் இந்த சோதனை நடைபெறுகிறது. இதன் காரணமாக அப்பகுதிகளில் பரபரப்பு நிலவி வருகிறது.
”தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“