கடந்த மார்ச் 1-ந் தேதி பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கபே ஹோட்டலில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில், என்.ஐ.ஏ அதிகாரிகள், கோவையில் 2 பயிற்சி மருத்துவர்கள் வீடுகளில் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் செயல்பட்டு வரும் ராமேஸ்வரம் கபே ஹோட்டலில் கடந்த மார்ச் 1ம் தேதி குண்டுவெடிப்பு நடைபெற்றது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், உள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு, என்.ஐ.ஏ அதிகாரிகளுக்கு மாற்றப்பட்ட நிலையில், என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிர விவாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு தொடர்பாக ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தொழில்நுட்ப வல்லுநர், மற்றும் தெலுங்கானாவில் கடத்தலில் ஈடுபட்டிருந்த முன்னாள் குற்றவாளி ஒருவர் என 2 பேரை என்.ஐ.ஏ அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். என்.ஐ.ஏ அதிகாரிகள் ராயதுர்கத்தில் உள்ள ஓய்வுபெற்ற பிரின்ஸ்பால் இல்லத்தில் பல மணிநேரம் சோதனை நடத்தியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, பெங்களூருவில் மென்பொருள் பொறியாளராகப் பணிபுரியும் அவரது இளைய மகன் சோஹைலை கைது செய்துள்ளனர். சோஹைலின் வங்கிக் கணக்கிற்கு பெருமளவு பணம் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அவருக்கு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனிடையே சோஹைல் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ராயதுர்கம் காவல் நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டார்.
மேலும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஜாபர் இக்பால் மற்றும் நயீம் சித்திக் ஆகிய இரு மருத்துவர்கள் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 2 ஆண்டுகளாக பயிற்சி பெற்று வந்தனர். அவர்களின் வீடுகளில் சோதனை மேற்கொண்ட என்.ஐ.ஏ. அதிகரிகள், அங்கிருந்து மொபைல் போன்கள் மற்றும் சிம் கார்டுகளை கைப்பற்றியுள்ளனர்.இந்த வழக்கில் நாடு முழுவதும் 11 இடங்களில் என்ஐஏ சோதனை நடத்தியது.
இந்த வழக்கின் விசாரணையின் போது, குண்டுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் முசாவிர் ஹுசைன் ஷாசிப் மற்றும் அப்துல் மத்தீன் தாஹா ஆகியோர் குறித்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அவர்ளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குண்டுவெடிப்பு நடந்த புகழ்பெற்ற ராமேஸ்வரம் ஓட்டலில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஒரு நபர் கேஷ் கவுண்டர் அருகே ஒரு பையை விட்டுச் செல்வது தெளிவான தெரிந்தது. பின்னர் அந்த பை வெடித்து சிதறி பலரை காயப்படுத்தியது. அந்த சந்தேக நபர் ஷாசிப் என பின்னர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“