மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரின் உடல் சித்தர் முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது. அவரது, உடலுக்கு பால், பன்னீர், சந்தனம், குங்குமம், மஞ்சள், இளநீர் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து, வில்வம், துளசி, வேப்பிலை, மஞ்சள், குங்குமம், ஜவ்வாது, உப்பு, விபூதி போடப்பட்டு உட்கார்ந்த நிலையில் அடக்கம் செய்யப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மேல்மருவத்தூர் என்ற இடத்தில் ஆதி பராசக்தி கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் சித்தர்களின் பீடம் என அழைக்கப்படுகிறது.
இந்தக் கோவிலின் தல வரலாறு, 1966 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28ஆம் நாள் தமிழகத்தில் வீசிய புயல்காற்றால், இங்குள்ள வேப்பமரம் வீழ்ந்தது; அதன் அடியில் இருந்த புற்று கரைந்து சுயம்பு வெளிப்பட்டது என்றும் வரலாறு கூறுகின்றது.
இங்கு, 1974ஆம் ஆண்டு சித்தர் பீடத்தின் முகப்பில் ஓம்சக்தி மேடை நிறுவப்பட்டது. இதனை மும்முறை வலம் வந்த பிறகே ஆலயத்துக்குள் செல்லவேண்டும்.
இங்கு, சித்தர் பீடத்தை நிறுவி ஆன்மிக குருவாகச் செயல்பட்டு வந்தவர் பங்காரு அடிகளார் (82). இவர் நேற்று மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார்.
இந்தக் கோவிலில் பெண்கள் பூஜிக்க அனுமதி உண்டு. மேலும் மாதவிடாய் காலங்களிலும் விலக்கு அளிக்காமல் அம்மனை தரிசிக்க அனுமதி உண்டு எனக் கூறப்படுகிறது.
இவரை பக்தர்கள் அம்மா என்றே அழைத்து வந்தனர். இவர் கடந்த ஓராண்டாக உடல் நலக் குறைவு காரணமாக அவதியுற்று வந்தார். இந்த நிலையில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“